August 21 - world senior citizens day முதுமை நெருங்கும் நேரமா? அருமையான 7 முதலீட்டுத் திட்டங்கள் இதோ...

 senior citizen's Investment
senior citizen's Investment
Published on

மூத்தக் குடிமக்கள் தங்களது ஓய்வுக் காலத்தினை அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கழிக்க, பல்வேறு அருமையான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.

எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு. அவையாவன;

1. பணத்தின் வளரும் விகிதம் (Rate of Return),

2. பணத்தின் நீர்ப்புத்தன்மை (Liquidity),

3. பணத்தை இழக்கும் அபாயம் (Risk)

மேலே குறிப்பிட்ட கூறுகள் முதலீட்டிற்கு முதலீடு மாறுபடும். உதாரணமாக, பங்குச்சந்தையில் வளரும் விகிதம் அதிகம், நீர்ப்புத்தன்மை அதிகம், பணத்தை இழக்கும் அபாயமும் அதிகம். வங்கி வைப்பு நிதியில் வளரும் விகிதம் நடுத்தரம், நீர்ப்புத்தன்மை அதிகம், பணத்தை இழக்கும் அபாயம் குறைவு.

மூத்தக் குடிமக்கள் தேர்ந்தெடுக்கும் முதலீடுகளானது, பணத்தை இழக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக இருக்க வேண்டும். எனவே, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் அவர்களுக்கு அபாயகரமானது.

அஞ்சலகம், வங்கிகள் சார்ந்த முதலீடுகள் அவர்களுக்கு சிறப்பானவை. அத்தகைய முதலீடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme - SCSS):

இந்தத் திட்டத்தில், மூத்தக் குடிமக்கள் ரூபாய். 30 இலட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் முடிவெடுக்கப்படும். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. பின்னர், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். தற்போதைய வட்டி விகிதம் 8.2%.

2. அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post office Monthly Income Scheme - POMIS) :

இந்தத் திட்டத்தில் தம்பதிகள் கூட்டாக, 9 இலட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் மாதாந்திரம் வருமானம் கிடைக்கும். இந்தப் பணம் உடனடியாக தேவையில்லாத பட்சத்தில், அஞ்சலகத்திலேயே தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) ஒன்றைத் தொடங்கி, இந்த வருமானத்தை முதலீடு செய்யலாம். அதன் மூலம், பணத்தை இன்னும் பெருக்க முடியும். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.4%.

இதையும் படியுங்கள்:
செயல்படாத PF கணக்குகளை முறைப்படுத்தும் வழிமுறைகள் இதோ!
 senior citizen's Investment

3. அஞ்சலக வைப்பு நிதிகள் மற்றும் வங்கி வைப்பு நிதிகள் (Post Office Time Deposit, Bank Fixed Deposits) :

இந்த வைப்பு நிதிகளில் நல்லதொரு பணப் பெருக்கம் கிடைக்கும். வைப்பு நிதிகளில் பணத்தைப் போடும் போது, பணத்தை பிரித்து, ஏணிப்படி முறையில் போடுவது நலம். உதாரணமாக, ஒருவரிடம் 5 இலட்ச ரூபாய் இருந்தால், அதனை 5 வைப்பு நிதிகளாகப் போட வேண்டும். முதல் வைப்பு நிதி ஒரு வருடம், இரண்டாவது வைப்பு நிதி இரண்டு வருடங்கள் என்று ஐந்தாவது வைப்பு நிதி ஐந்து வருடங்களுக்கு இருக்க வேண்டும். வைப்பு நிதியின் காலவரையறை கூடக் கூட, வட்டி விகிதம் கூடும். உதாரணமாக, அஞ்சலகத்தில் 1 ஆண்டிற்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7%, 3 ஆண்டுகளுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5%. எனவே, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, அடுத்த ஆண்டின் செலவுகளைத் திட்டமிட முடியும்.

வங்கி வைப்பு நிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, நம்பிக்கையான வங்கியா என்று பார்க்க வேண்டும். பெரிய மற்றும் பொதுத்துறை வங்கிகள் போன்றவை சிறிய மற்றும் தனியார் வங்கிகளை விட, அதிக பாதுகாப்பானவை. மூத்தக் குடிமக்களுக்கு பொதுவாக வங்கிகளில் வட்டி விகிதம் அதிகம். அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டிகளுக்கு 50,000 ரூபாய் வரை வருமான வரிப் பிரிவு 80TTB இன் கீழ் வரி விலக்கு உண்டு.

4. ஆயுள் காப்பீடு வருடாந்திர ஆண்டுத்தொகை திட்டம் (Life Insurance Annuity Scheme):

காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு, மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வழங்கப்படும். இத்தகைய திட்டங்களில் முதலீட்டிற்கு ஏற்றவாறு மாதா மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகை ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

5. பாரத ரிசர்வ் வங்கி நடப்பு வீதம் கடன் பத்திரங்கள் (RBI Floating Rate Bonds) :

இந்தக் கடன் பத்திரங்கள் பாரத ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு அரையாண்டிற்கும் வட்டி வழங்கப்படும். நடந்து முடிந்த அரையாண்டிற்கு வட்டி விகிதம் 8.12% என இருந்தது. இவை பாரத ரிசர்வ் வங்கியின் திட்டமாதலால், பாதுகாப்பு அதிகம்.

6. அரசாங்க கடன் பத்திரங்கள் (Government of India Bonds):

இத்தகைய கடன் பத்திரங்கள் 10 முதல் 40 வருடங்கள் வரை இருக்கலாம். இவற்றிற்கு வட்டியானது வருடாந்திரம் வழங்கப்படும். இவற்றில் சிலவகையான கடன் பத்திரங்களுக்கு, வட்டிக்கு வரி கிடையாது (Tax Free bonds).

7. அஞ்சலக தேசிய சேமிப்புத் திட்டம் (National Savings Scheme):

இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். தற்போதைய வட்டி விகிதம் 7.7%. எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கும் முன்பு, குறிக்கோளுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். நடுவில் எடுக்கும் நிலை வந்தால், அபராதம் கட்ட நேரும். எனவே, குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மருத்துவக் காப்பீடு அவசியம். அதன் மூலம், மருத்துவச் செலவுகளை எளிதில் கையாள முடியும். அவசர கால நிதி அவசியம். அதன் மூலம் அவசர பணத் தேவைகளை கடன் வாங்காமல் கையாள முடியும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், அவ்வப்போது வருவாய் கிடைக்கும். அந்த வருவாயானது ஓய்வுகாலத்தின் செலவுகளுக்கு உதவும். அதிகப்படியான வருவாயை மறுமுதலீடு செய்து பெருக்கி, பின்னர் பயன்படுத்தலாம். மூத்தக் குடிமக்கள் எல்லா வளங்களும் பெற்று இனிமையான வாழ்க்கை வாழ, இத்தகைய முதலீடுகள் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com