

வங்கி லாக்கர் பாதுகாப்பு முழுமையானதா? ரிசர்வ் வங்கி விதிகளின் நிதர்சனம்!
வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிகள் தானாகவே முழு காப்பீடு வழங்குவதில்லை. நாம் லாக்கரில் என்ன வைத்துள்ளோம் என்பது குறித்து வங்கிக்கு தெரியாது என்பதால் அவர்கள் காப்பீடு வழங்குவதில்லை.
இழப்பீடு என்பது வங்கி ஊழியர்களின் தவறைப் பொறுத்து ஏற்படலாம் அல்லது இயற்கை பேரிடர்களால் ஏற்படலாம். எனவே நகைகள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்க தனிநபர் காப்பீடுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. வங்கி லாக்கர் பாதுகாப்பு முழுமையானது அல்ல. திருட்டு, தீவிபத்து அல்லது இயற்கை பேரிடர்களால் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால் அல்லது காணாமல் போனால், வங்கி அதன் முழு மதிப்பையும் திருப்பித் தருவதில்லை. எனவே விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் ஆவணங்களுக்கு முழுமையான நிதி பாதுகாப்பு கிடைக்க காப்பீடு செய்வது மிகவும் அவசியம்.
வங்கிகள் லாக்கருக்கான இடத்தை மட்டுமே வழங்குகின்றனவே தவிர அதிலுள்ள பொருட்களுக்கு நேரடிப் பொறுப்பேற்பது இல்லை. எனவே எதிர்பாராத திருட்டு, இயற்கை பேரிடர் அல்லது தீ விபத்து போன்ற சமயங்களில் ஏற்படும் இழப்புகளுக்குத் தனி காப்பீடு மட்டுமே முழுமையான பாதுகாப்பைத்தரும்.
வாடிக்கையாளர் செலுத்தும் வருடாந்திர லாக்கர் கட்டணத்தின் நூறு மடங்கு தொகைக்கு மட்டுமே வங்கி பொதுவாக பொறுப்பேற்கும். உதாரணத்திற்கு நம் லாக்கர் கட்டணம் ஆண்டிற்கு 2000 ரூபாய் என்றால், இழப்பு ஏற்பட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதுவே காப்பீட்டு பாலிசிகள் நம் லாக்கரில் உள்ள பொருட்களின் முழு சந்தை மதிப்பிற்கும் கவரேஜ் வழங்குகின்றன.
எதிர்பாராத ஆபத்துகளான வங்கி லாக்கர் கொள்ளை, பூகம்பம், வெள்ளம் மற்றும் தீ விபத்து போன்ற எதிர்பாராத பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து முழுப் பாதுகாப்பைத் தருகிறது. காப்பீடு எடுப்பதால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை வைத்திருக்கும்போது ஏற்படும் தொடர்ச்சியான பயத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது.
வங்கி லாக்கர் பொருட்களுக்குத் தனியார்த் துறை வழங்கும் காப்பீட்டுப் பாலிசிகள்!
இஃப்கோ டோக்கியோ (IFFCO Tokio), சோழமண்டலம் எம்.எஸ்(Chola MS), ஹெச்.டி.எஃப்.சி எர்கோ (HDFC ERGO) போன்ற நிறுவனங்கள் லாக்கர் பாதுகாப்பு காப்பீடுகளை (Standalone Bank Locker Policy) வழங்குகின்றன.
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாக்கர் பொருட்களுக்கு தனி பாலிசிகளை வழங்குகின்றன. இதன் பிரீமியம் மதிப்பு 0.5% முதல் 1% வரை மட்டுமே இருக்கும். தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகளும், பாஸ்போர்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களும் நாம் எடுக்கும் காப்பீட்டில் அடங்கும். நாம் வைத்திருக்கும் நகைகள் மற்றும் ஆவணங்களின் மொத்த மதிப்பை கணக்கிட்டுக் கொண்டு, அதன் அடிப்படையில் அருகிலுள்ள பொது அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அணுகி பாலிசிகளை வாங்கலாம்.
காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
*பெரும்பாலான வங்கிகள் லாக்கர் பொருள்களுக்கு நேரடியாகக் காப்பீடு வழங்குவதில்லை. எனவே தனியாக காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 'பேங்க் லாக்கர் பாலிசி' எடுக்க வேண்டும்.
*ரூபாய் 40 லட்சம் வரையிலான மதிப்புள்ள பொருட்களுக்கு நம் சுய அறிவிப்பின் அடிப்படையிலேயே காப்பீடு பெறலாம்.
*ஒரு பொருளின் மதிப்பு ரூபாய் 10 லட்சத்தைத் தாண்டினால் அதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளரின் (Approved Valuer) சான்றிதழ் தேவைப்படும்.
*இழப்பீடு கோரும்போது (claim) எளிதாகப் பணம் பெறுவதற்கு பொருட்களின் ரசீதுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து சேமித்து வைப்பது அவசியம்.
*காப்பீடு எடுப்பதற்கு முன்பு அவை வழங்கும் பாதுகாப்பின் அளவைப் புரிந்துகொள்ள, வெவ்வேறு காப்பீட்டுக் கொள்கைகளின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் கவனமாக மதிப்பாய்வு செய்யவேண்டும்.
*காப்பீட்டு பிரீமியங்கள், பாதுகாப்பு வரம்புகள், உரிமைகோரல் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கூடுதல் விருப்பங்கள் ஆகியவற்றை கவனிக்கவேண்டும். முக்கியமாக நமக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்கள், கேள்விகளுக்குத் தீர்வு காண வங்கிப் பிரதிநிதி அல்லது காப்பீட்டு நிபுணருடன் கலந்தாலோசிக்கவும். இது நம் சொத்துக்களை திறம்பட பாதுகாக்க உதவும்.
*வங்கி லாக்கரில் நம் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பதற்கு முதலில் நம்பகமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற நம்பிக்கைக்குரிய நிதி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கொள்வதுடன், வங்கி லாக்கருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்கு உயர்தரமான பூட்டை பயன்படுத்தலாம். அத்துடன் நம்பகமான நபர்களுடன் மட்டுமே லாக்கர் அணுகல் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
Reference:
RBI has issued guidelines for new Bank Locker Facility - Here is everything you need to know