இந்தியாவின் சிறிய நகரங்களில் கால் பதிக்கும் பெரிய ஐடி நிறுவனங்கள்!
இந்தியாவின் 26 இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில் நிறுவனங்களைத் தொடங்க பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாராகி வருவதாக நாஸ்காம் டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக பல்வேறு வளர்ச்சிகள், மாற்றங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவினுடைய மக்கள் தொகை பெருக்கத்தில் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக மாறி வரக்கூடிய நேரத்தில் ஐடி எனப்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் ஐடி நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளமும் கூடுதலாக இருப்பதால் மக்களும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிவதை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், புனே, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற 7 நகரங்களில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த 7 நகரங்களில் மட்டும் கோடிக்கணக்கான நபர்களுக்கு ஐடி நிறுவனங்கள் வேலை வழங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் நாஸ்காம் டெல்லாய்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு அறிக்கையில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதாகவும், அதிலும் குறிப்பாக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் அளிக்க முன் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நிலவக்கூடிய ஒற்றுமை மற்றும் மக்கள் தொகை, திறமையான பணியாளர்கள் கிடைப்பது போன்ற காரணங்களால் பெரு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்ட முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள 26 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி, கோவை மதுரை, வேலூர் போன்ற நகரங்கள் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு மாநில அரசுகள் ஊக்கமளிப்பதும், மேலும் ரியல் எஸ்டர்டிற்கு ஆகும் செலவு 50 சதவீதம் குறைவாக இருப்பதும் மற்றும் மற்ற வகை செலவுகளும் 50 சதவீதம் குறைவாக இருப்பதும் இதற்கு கூடுதல் காரணம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.