பாண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? அதன் சாதக பாதகங்கள் என்ன? 

Bond Investments
Bond Investments
Published on

ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும் போது மக்கள் , தங்களது சேமிப்புகளை அதிக லாபம் தரும் வழிமுறைகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முன்னர் இன்சூரன்ஸ்களில் மட்டுமே முதலில் முதலீடு செய்த மக்கள் தற்போது ULIP, SIP, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். யூலிப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் சந்தை சார்ந்த அபாயங்கள் இருப்பதால், பணத்தினை முதலீடு செய்ய பாதுகாப்பான வழிகளை தேடிக் கொண்டுள்ளனர். தற்போது பாண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பான வழியாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

​பத்திர முதலீடு (Bonds Investment) என்றால் என்ன? 

பொதுவாக பத்திர (Bond) முதலீடு என்பது பாதுகாப்பான முதலீட்டு வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது முழுமையாக பாதுகாப்பானதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பத்திரங்கள் என்பது அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தினை திரட்டும் ஒரு வழியாகும். நீங்கள் பத்திரங்கள் வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்திற்கு கடனாக வழங்குகிறீர்கள்.

அந்த நிறுவனங்கள் உங்கள் பணத்தினை பயன்படுத்திக் கொண்டு அதற்கு பதிலாக, அவ்வப்போது கூப்பன் ரேட் (Coupon Rate) எனப்படும் வட்டியை உங்களுக்கு தருகின்றன. கடன் பத்திரத்தின் காலம் முடிந்ததும் (Maturity), உங்கள் அசல் தொகை உங்களிடமே திரும்பி வந்துவிடும். இதற்கிடையில் வட்டியின் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். 

சமீபத்திய 2026-ஆம் ஆண்டு பொருளாதாரத் தரவுகளின்படி, முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பத்திரச் சந்தை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டு காலத்தில் இந்திய அரசின் பத்திரங்களின் வருவாய்  6.63% ஆக உயர்ந்துள்ளது. இது நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் சாதாரணமான முதலீட்டாளர்களுக்கு சாதகமான ஒரு செய்தியாகும்.

பத்திர முதலீடுகளின் வரலாறு:

வரலாற்றின்படி பத்திர முதலீடுகள் முதன் முதலில் மெசபடோமியா நாட்டில் தோன்றியது.  கி.மு. 2400-களிலேயே தானியங்களை கடனாகப் பெற்றவர்கள் , குறிப்பிட்ட காலத்தில் அதை திருப்பித் தருவதற்கு ஒப்பந்தங்களை களிமண் பலகைகளில் எழுதிக் கொடுத்துள்ளனர்.

கிபி.1100 ஆண்டுகால வாக்கில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில், போர்களை சந்திக்க அரசிடம் போதிய அளவில் பணம் இல்லை. அதனால்,  அவர்கள் குடிமக்களிடம் கடனாக பணம் பெற்று , அதற்கு 5% வட்டி தருவதாக உறுதியளித்தனர். இதற்காக உறுதிப்பத்திரங்கள் தரப்பட்டது. இந்தப் பத்திரங்களை ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் விற்கவும் முடியும்.

பின்னாளில் 1694 ஆம் ஆண்டு வாக்கில் பேங்க் ஆப் இங்கிலாந்து கடன் பத்திரங்களை வெளியிட்டு , அதன் மூலம் அந்த காலத்திலேயே பொதுமக்களிடம் இருந்து சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை திரட்டியது. தற்போது உலகம் முழுவதும் பாண்டுகளில் முதலீடு செய்வது பரவலாக உள்ளது.

பத்திரங்களின் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை: 

கூப்பன் விகிதம் (Coupon Rate): 

கூ ப்பன் விகிதம் என்பது உங்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டியை குறிப்பிடுகிறது. இந்த கூப்பன் விகிதம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தகுந்தவாறு மாறுபடும் , அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை ,அந்த நிறுவனத்தின் நீண்ட கால செயல்பாடு, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாறுபடும்.

​கடன் மதிப்பீடு (Credit Rating):

AAA போன்ற உயர் மதிப்பீடு கொண்ட நிறுவனங்களின் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. எப்போதும் அதிக மதிப்பீடு கொண்ட நிறுவனங்களின் பத்திரங்களை வாங்குவது மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் ,அதே நேரம் வட்டி விகிதமும் அதிகமாக கிடைக்கும்.

அரசுப் பத்திரங்கள்:

பொதுவாக அரசு நிறுவனங்களின் பத்திரங்கள் மிகவும் வலிமையானவை. அவ்வளவு எளிதில் அரசு நிறுவனங்களின் மதிப்பு குறைந்து விடாது , அதே நேரத்தில் இதன் நம்பகத் தன்மையும் மிகவும் அதிகம். அரசாங்கங்கள் வெளியிடும் பத்திரங்கள் , ரிஸ்க் ஃப்ரீ என்று கருதப்படுகின்றன. 

​சந்தை விலை மாற்றம்: 

உங்களுக்கு கொடுக்கப்பட்ட கூப்பன் விகிதம் மாறாவிட்டாலும் , சந்தையில் வட்டி விகிதங்கள் மாறும் போது உங்கள் பத்திரத்தின் விலை அதிகரிக்கவும் அல்லது குறையவும் செய்யலாம். 

பச்சை பத்திரங்கள் (Green Bonds):

தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி திரட்டுவதற்கு கிரீன் பாண்டுகள் சந்தையில் பிரபலமாகி வருகின்றன. 2026 ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்திய சினிமாவில் களமிறங்கும் Hollywood இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்!
Bond Investments

​புளூம்பெர்க் குறியீடு தள்ளிவைப்பு:

 இந்திய அரசுப் பத்திரங்களை உலகளாவிய புளூம்பெர்க் குறியீட்டில் (Bloomberg Index) சேர்ப்பதை 2026 ஜூன் மாதம் வரை தள்ளி வைத்துள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

பத்திர முதலீட்டில் உள்ள அபாயங்கள்:

பொதுவாக மற்ற முதலீட்டு அம்சங்களில் உள்ள ஆபத்தை விட இதில் குறைவாக இருக்கிறது. ஆனால் , ஆபத்தே இல்லை என்று கூறிவிட முடியாது.

1. சந்தையில் புதிய நிறுவனங்களின் வட்டி விகிதங்கள் உயரும்போது , புழக்கத்தில் உள்ள பழைய பத்திரங்களின் விலை தானாக குறைய தொடங்கிவிடும் , இது பழைய பத்திரங்களை புறக்கணிப்பதால் இவ்வாறு நிகழும். இந்த தருணத்தில் மெச்சூரிட்டி காலம் முடியும் வரை, பத்திரங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பலன் கிடைக்கும்.

2. நீங்கள் பத்திரம் மூலம் கடன் வழங்கிய நிறுவனங்கள்,  நஷ்டமடைந்தாலோ திடீரென்று இழுத்து மூடப்பட்டாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை. 

3. பணம் வீக்கம் , உங்களுக்கு கிடைக்கும் வட்டியை விட அதிகமாக இருந்தால் , உங்கள் முதலீட்டின் மதிப்பு குறையும்.

4. உங்களின் அவசர தேவைக்காக சந்தகைகளில் உங்கள் பத்திரத்தை விற்க முடிவு செய்யும் பொழுது , யாரும் வாங்க விட்டால் அது உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். 

5. ஒவ்வொரு பத்திரங்களை வாங்கும் போதும் அதன் கீழே உள்ள நிபந்தனைகளை கட்டாயம் படித்துவிட்டு வாங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com