
பங்குச்சந்தையில் பொதுவாக இரண்டு வகை ஓட்டங்கள் உண்டு. ஒன்று காளை ஓட்டம். மற்றொன்று கரடி ஓட்டம். காளை ஓட்டத்தின் போது பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருக்கும். கரடி ஓட்டத்தின் போது கடன் பத்திரங்களின் விலை ஏறுமுகத்தில் இருக்கும். சமயோஜிதமாக செயல்பட்டு, இத்தகைய ஓட்டங்களை நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்தி நமது பணத்தினை நல்லதொரு முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
வௌவால்கள் இரவில் விழித்திருந்து, பகலில் உறங்கும் வழக்கத்தை உடையவை. ஒரு வௌவால் மரத்தின் மேல் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தது. அப்பொழுது அது கால் இடறி தரையில் விழுந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு கீரி வாழ்ந்து வந்தது. உடனே, அது வந்து வௌவாலைப் பிடித்துக் கொண்டது.
வௌவால் தன்னை விட்டு விடுமாறு கீரியிடம் கெஞ்சியது.
'பறவை இனங்கள் எனக்கு எதிரி. எனவே, உன்னை நான் கொன்று தின்னப் போகிறேன்' என்றது கீரி.
'ஆஹா! என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் பறவை இனம் அல்ல. நான் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதில்லை. நான் குட்டி ஈன்று பாலூட்டும் முதுகெலும்புள்ள பாலூட்டி அல்லவா? நான் உங்களைப் போன்றே மிருகம்தான். என்னை விட்டு விடுங்கள்' என்றது வௌவால்.
கீரியும் வௌவால் சொல்வது சரிதான் என்று வௌவாலினை விட்டு விட்டது.
சில காலம் சென்றது. மறுபடியும் மேலே தூங்கிக் கொண்டிருந்த வௌவால் கால் இடறி தரையில் விழுந்தது. இப்பொழுது மறுபடியும் கீரி வந்து அதனைப் பிடித்துக் கொண்டது.
'ஐயா! என்னை மறந்து விட்டீர்களா? போன தடவை நாம் நண்பர்கள் என்று முடிவானதே?' என்றது வௌவால்.
'இல்லை. சென்ற வாரம் தான் நான் பறவைகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நானும் பறவைகளும் இப்பொழுது நண்பர்கள் ஆகிவிட்டோம். எனவே, இப்பொழுது எனக்கு மற்ற மிருகங்கள்தான் எதிரிகள். எனவே, உன்னை நான் கொன்று தின்னப் போகிறேன்' என்றது கீரி.
'ஆஹா! நானும் கூட போன வாரம் தான் பறவைகளின் கூட்டத்தில் இணைந்து கொண்டு விட்டேன். என்னைப் பாருங்கள். எனக்கு இறக்கைகள் கூட இருக்கின்றன. என்னாலும் பறக்க முடியும். நானும் பறவை தான். என்னை விட்டு விடுங்கள்' என்றது வௌவால்.
கீரியும் வௌவால் சொல்வது சரிதான் என்று வௌவாலினை விட்டு விட்டது.
இவ்வாறு இரண்டு முறைகளும் வௌவால் தனது சமயோஜிதமான பேச்சினால் தன்னைக் காத்துக் கொண்டது.
இங்கு கீரி என்பது பங்குச்சந்தையைப் போன்றது. பங்குச்சந்தையின் போக்கை நம்மால் கணிப்பது கடினம். உலக அரசியல், நாட்டின் அரசியல், நாட்டின் பொருளாதார நிலை, போர்கள், குறிப்பிட்ட துறைகளின் மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தையின் போக்கு மாறுகிறது. பொருளாதாரம் ஏற்ற நிலையில் இருக்கும்போது காளை ஓட்டத்திலும், மந்த நிலையில் இருக்கும்போது கரடி ஓட்டத்திலும் என மாறி மாறி பங்குச்சந்தை ஓடுகிறது.
இப்போது நாம் வௌவாலைப் போல பங்குச்சந்தையின் போக்கினை கண்டு அதற்கேற்றவாறு நமது முதலீட்டினைச் செய்ய வேண்டும். கரடிச் சந்தையில் பங்குகளின் விலை குறைவாக இருக்கும். அப்போது நமது முதலீட்டு கலவையில் பங்குகளைச் சேர்க்க வேண்டும். காளைச் சந்தையின் பொழுது கடன் பத்திரங்களின் விலை குறைவாக இருக்கும். அப்போது நமது முதலீட்டு கலவையில் கடன் பத்திரங்களைச் சேர்க்க வேண்டும்.
பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சேர்ந்த முதலீட்டுக் கலவை வேண்டும். அப்போதுதான், கரடி மற்றும் காளை ஓட்டங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தை எப்படி பயணித்தாலும் நமது முதலீட்டு கலவை நன்றாக வளரும். வருடா வருடம் நமது முதலீட்டு கலவையில் வருடாந்திர சமன்படுத்துதல் (Annual Rebalancing) செய்ய வேண்டும். உதாரணமாக, நமது முதலீட்டுக் கலவை 60% பங்குகள், 40% கடன் பத்திரங்கள் எனில் அந்த வருடம் காளைச் சந்தையாக இருந்தால் நமது பங்குகளின் மதிப்புகள் கூடியிருக்கும்.
கடன் பத்திரங்களின் மதிப்புகள் குறைந்திருக்கும். அப்போது நாம் நமது சில பங்குகளை விற்று பணத்தை கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். மறுபடியும் நமது முதலீட்டு கலவையின் விகிதாச்சாரத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வருவதன் மூலம், நம்மால் நமது பணத்தை இன்னும் நன்றாக பெருக்க முடியும். இதன் மூலம் காளை மற்றும் கரடி ஓட்டங்களை நம்மால் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.