தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் தங்க முதலீட்டை சிறந்ததாக கருதுகின்றனர். இந்நிலையில் காப்பீடு பாலிசித் தொகையில் தங்கம் வாங்க நினைப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வி நடுத்தர மக்களுக்கு எழுகிறது. இதற்கான விடையை அளிக்கிறது இந்தப் பதிவு.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சேமிப்பை இன்றே தொடங்குவது தான் நல்லது. வருங்கால தேவைக்கு நாம் சேமிக்க சந்தையில் பல வழிகள் உள்ளன. காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி, அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற பல திட்டங்கள் உள்ளன. இதில் நமக்கேற்ற திட்டத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒருவர் ஏற்கனவே காப்பீட்டுத் திட்டத்தில் மாதாமாதம் ஒரு தொகையை செலுத்தி வருகிறார் எனில், அவர் அதை விடுத்து வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கலாம். அது தங்கமாக கூட இருக்கலாம்.
இருப்பினும் காப்பீட்டுத் திட்டத்தை தவிர்த்து தங்கத்தை வாங்குவது நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. தங்கத்தின் தொடர் விலையேற்றம் தான் இதற்கு காரணம். அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை இன்னும் உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கத்தை இப்போதே வாங்கி விட்டால், பின்னாளில் தங்கத்தை விற்றால் அதிக விலைக்குப் போகும் என பலரும் நினைக்கின்றனர். சிலர் வருங்காலத்தில் தங்கத்தை வாங்குவதற்கு அதிக பணம் தேவைப்படும் எனக் கருதியும், இப்போதே வாங்குகின்றனர்.
தங்கத்தின் விலையுயர்வு பொருளாதாரச் சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக காப்பீட்டை நிறுத்தி விட்டு தங்கத்தை வாங்க நினைப்பது சரியான முடிவல்ல. காப்பீட்டு திட்டம் என்பது வருங்காலத் தேவைக்கு உதவும் சேமிப்பு; தங்கத்தை வாங்குவது என்பது முதலீடு. இரண்டிற்கு வித்தியாசம் உண்டு. காப்பீடு, வருமானம் ஈட்டுவதற்கான வழி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காப்பீடு என்பது உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்து வைத்திருக்கும் பாதுகாப்பான பண நடவடிக்கை. காப்பீடு மற்றும் தங்கம் ஆகிய இரண்டின் நோக்கமும் வேறு வேறானது.
ஒரு முதலீட்டை நிறுத்தி விட்டு, இன்னொன்றில் முதலீடு செய்வது தவறான அணுகுமுறையாகும். ஒரு திட்டத்தை விட மற்றொன்று இலாபம் கிடைக்கும் திட்டமாகத் தெரியலாம். ஆனால், அது உண்மையாக இருக்காது. ஒருவேளை தங்கத்தை வாங்க நினைத்தால், காப்பீட்டை நிறுத்தாமல் வாங்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய ஓய்வு காலத்தில் நல்ல பலனைத் தரக்கூடியது.
காப்பீட்டுக்கான பணத்தை நிறுத்தி வைத்து தான் தங்கம் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் சிலவற்றை ஆராய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு காப்பீட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாலிசி செலுத்த வேண்டும். பாலிசி செலுத்துவதை இடையில் நிறுத்தினால் என்னென்ன சலுகைகளை இழக்க வேண்டிய சூழல் வரும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். காப்பீட்டு முகவரைத் தொடர்பு கொண்டு போனஸ் தொகையில் ஏதேனும் பிடித்தம் செய்யப்படுமா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இழப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் காப்பீட்டிற்கான பாலிசி செலுத்துவதை நிறுத்த வேண்டாம்.