
குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைக் கொடுக்கும் முதலீட்டு வாய்ப்பாக பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பார்க்கப்படுகின்றன. சிறு மற்றும் பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை சேகரித்து ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் பத்திரங்கள் என முதலீடு செய்ய உதவும் முதலீட்டு வாகனம் தான் மியூச்சுவல் ஃபண்ட். இதில் முதலீடு செய்வதற்கு எஸ்ஐபி முறை பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமான இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைக் கூட மொபைல் செயலிகளிலேயே தொடங்க முடியும். இருப்பினும் இது பாதுகாப்பானது தானா என்ற சந்தேகம் சிறு முதலீட்டாளர்களுக்கு உண்டு.
வருங்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்றைய முதலீடு தான் துருப்புச்சீட்டாக அமைகிறது. இன்று பொருளாதார சந்தையில் முதலீட்டு வாய்ப்புகள் பன்மடங்கு பெருகி விட்டன. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சிறு மற்றும் பெரு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பெரு முதலீட்டாளர்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்ய நினைக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு மொபைல் செயலிகள் உதவுகின்றன. மொபைல் செயலிகளில் முதலீடு செய்த பின், அந்த செயலி திடீரென காணாமல் போய் விட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ என்ன செய்வது என பலரும் குழம்புகின்றனர்.
புதிய மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு எழக்கூடிய நியாயமான சந்தேகம் தான் இது. இருப்பினும், மொபைல் செயலிகள் மூலமாக நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்று தான். உங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு கை மாற்றும் வேலையை மட்டுமே இந்த ஆன்லைன் செயலிகள் செய்கின்றன. செயலிகள் உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளாது. இதன்மூலம் நம்முடைய வங்கிக் கணக்கிற்கு ஃபண்ட் யூனிட்டுகளின் உரிமை நேரடியாகவே மாற்றப்படும். இந்த செயல்முறைகள் அனைத்தையும் செபி எனும் மத்திய அரசின் நிதி நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கும்.
ஒருவேளை இந்தச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலோ அல்லது திடீரென வேலை செய்யாமல் போனாலோ நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் உங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஃபோர்ட்போலியோ எண் மற்றும் பான் கார்டை வைத்து, சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்க முடியும். இதனை ஏற்றுக் கொண்டு யூனிட்டுகளுக்கான அப்போதைய சந்தைத் தொகையை அந்நிறுவனம் உங்களுக்கு அளிக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உங்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு முதலில், ஆர்.டி.ஏ. எனும் பதிவு மற்றும் பரிமாற்ற முகவர் நிறுவனங்ளாக இருக்கும் கே-ஃபின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் கேம்ஸ் (CAMS) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு உங்களின் மொபைல் எண் மற்றும் பான் எண்ணைச் சமர்ப்பித்து உங்கள் பெயரில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.