
இந்தியாவில் ஆண்டுதோறும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் முதலீடு என்றவுடன் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளை நாடிச் சென்ற மக்கள், இன்று பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ்ஐபி முதலீட்டை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். இருப்பினும் இந்த முதலீடுகளில் பலருக்கும் புரியாத பல புதிர்கள் உள்ளன. இவை அனைத்தையும் அறிந்து கொண்டோ அல்லது பொருளாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றோ முதலீடு செய்வது தான் நல்லது. அவ்வகையில் எஸ்ஐபி முதலீட்டில் இருந்து அவசரத் தேவைக்கு நம்மால் பணத்தை எடுக்க முடியமா என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறது இந்தப் பதிவு.
சிறிய அளவில் முதலீடு செய்பவர்களை ஈர்க்கும் விதமாக, குறைந்த அளவிலான முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது தான் எஸ்ஐபி முதலீடு. மாதந்தோறும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பலரும் எஸ்ஐபியில் முதலீடு செய்து வருகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) வழியாக மாதந்தோறும் தவணை முறையில் முதலீடு செய்யலாம்.
உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மாதந்தோறும் நீங்கள் தேர்வு செய்த முதலீட்டிற்கு ஏற்ப பணம் கழித்துக் கொள்ளப்பட்டு, ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். மொத்த முதலீட்டு காலத்திற்கு ஏற்ப உங்களின் முதலீடு பலமடங்கு பெருகும்.
எஸ்ஐபியில் முதலீடு செய்யும் ஒருவர், அவசரத் தேவைக்கு கடன் வாங்குவதைத் தவிர்த்து முதலீட்டில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வி நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கும் உண்டு. பொதுவாக வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் முதலீடு செய்தால், திட்டத்தைப் பொறுத்து விதிமுறைகளுக்கு ஏற்ப அவசரத் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. இதே போல் எஸ்ஐபியிலும் இந்த வசதி இருக்கிறது. இருப்பினும் நீங்கள் எவ்கையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், எஸ்ஐபி வழியாக முதலீடு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் இ.எல்.எஸ்.எஸ். அல்லது பிக்சட் மெச்சூரிட்டி ஃபண்டு ஆகிய திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், 3 அல்லது 5 ஆண்டுகள் வரை பணத்தை எடுப்பதறாகான வாய்ப்புகள் இல்லை. இதனை லாக் இன் பீரியட் என்று அழைப்பர்.
வேறு திட்டங்களில் முதலீடு செய்து, அதிலிருந்து பணத்தை முன்கூட்டியே அவசரத் தேவைக்காக எடுக்கும் போது, நீங்கள் எடுக்கின்ற காலத்தைப் பொறுத்து வரி செலுத்த வேண்டியது அவசியமாகும். அதாவது குறுகிய கால ஆதாய வரி அல்லது நீண்ட கால ஆதாய வரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் எவ்வளவு பணம் கேட்கிறீர்களோ, அந்தத் தொகையின் அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் விற்கப்பட்டு தான் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். இச்சமயத்தில் மீதமிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளும், சேமிப்பும் கணிசமாக குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.