Diwali Special Offer
Diwali Special Offer

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தீபாவளி ஸ்கேம் - ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்!

Published on

தீபாவளி பண்டிகை வந்தாலே நமக்கு நிறைய சலுகைகள், தள்ளுபடிகள் ஒவ்வொரு பொருட்களிலும் வழக்கமாக கிடைக்கிறது. நாமும் சலுகைக்காகவும் தள்ளுபடிக்காகவும் அதிக பொருட்களை வாங்குகிறோம். சில இலவசப் பொருட்களும் கூடுதலாக கிடைக்கும் 10% உபரியும் பல பொருட்களின் எடையோடு சேர்த்து வழங்கப்படுகின்றன.

நாமும் நிறைய லாபம் பார்த்து விட்டோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம். நிறுவனங்களுக்கு என்ன ஒரு தாராள மனது என்று அக்கம் பக்கத்தினரிடம் சிலாகித்து பேசுகிறோம். உண்மையில் லாபம் என்பது நமக்கு என்று முட்டாள்தனமாக நாம் இருக்கிறோம். புத்திசாலித்தனமாக லாபம் பார்ப்பது என்னவோ நிறுவனங்கள் தான். சில செயல்களை நீங்கள் சோதனை செய்து பாருங்கள், உங்களுக்கு உண்மை தெரிய வரும்.

முதலில் நாம் குண்டு குண்டு குலோப் ஜாமுனுக்கு செல்வோமா? ஸ்கேமை ஆரம்பித்து வைத்ததே இவர்கள் தான். ஒரு குலோப் ஜாமூன் பாக்கெட் வாங்கினால் ஒரு குலோப் ஜாமூன் பாக்கெட் இலவசம் என்று ஒரு பாக்கெட் உடன் இன்னொரு பாக்கெட்டை ஒட்டி வைத்திருப்பார்கள். ஒரு பாக்கெட்டின் விலை ₹150 என்று விலையிடப்பட்டு இன்னொரு ₹150 பாக்கெட் இலவசமாக வரும். 

உண்மையில் அடுத்த மாதம் அதே கடைக்கு சென்று 2 குளோப் ஜாமுன் பாக்கெட்டை வாங்கி பாருங்கள் இலவசம் இல்லாத போதும் அதே ₹150 க்கு தான் விற்பனை ஆகிறது. இம்முறை ஒரு பாக்கெட்டின் விலை ₹75 என்று விலை அச்சிடப்பட்டு இருக்கும். உண்மையில் அவர்கள் இலவசமாக கொடுக்கவில்லை. இலவசம் என்று பெயரை வைத்து அதற்கும் சேர்த்து பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். சில குலோப் ஜாமூன் நிறுவனங்கள் கண்ணாடி கோப்பை, சில்வர் பவுல், ஸ்பூன், சிறிய கப் அல்லது 20% உபரி குலோப் ஜாமூன் பவுடர் ஆகியவற்றை சேர்த்து ₹75 க்கு விற்க வேண்டிய பொருளை ₹100 க்கு தலையில் கட்டுகிறார்கள்.

அடுத்ததாக எண்ணெய்க்கு செல்வோம். வழக்கமாக ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ₹110 தான் இருக்கும். தீபாவளி வந்து விட்டால் ₹20 ஏற்றி விடுவார்கள். சோதனை செய்து பாருங்களேன். அதுவும் எண்ணெய் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று ₹130 க்கு விற்பனை ஆகும். இன்னொன்று 5 லிட்டர் எண்ணெய் ₹750 க்கு விலையிடப் பட்டு ஒரு வாளியோடு இருக்கும். இந்த வாளிக்காக ₹100 அதிகமாக எண்ணெய் விலையில் சேர்த்து இருப்பார்கள். இலவச வாளியின் அளவும், இலவச டப்பாவின் அளவும் பெரிதாக இருந்தால் எண்ணெயின் விலையும் பெரிதாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்வது எப்படி?
Diwali Special Offer

காபித்தூள் வாங்கினால் டபாரா செட் அல்லது ஸ்பூன் இலவசமாக கிடைக்கும். சில பலகார ரெடி மிக்ஸ் பாக்கட்களுக்கும் ஒரு இலவசத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். கோதுமை மாவு நிறுவனத்தினர் தான் சற்று உருப்படியாக இருப்பார்கள். அதே விலையில் 100 கிராம் உபரியை சேர்த்து தருகிறார்கள். இவர்களிலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் கோஷ்டியும் உண்டு.

துணிகளில் கூட இதே கதை தான். புரட்டாசி மாசமே துணிகளில் 20% விலையை ஏற்றி வைத்து விட்டு அதில் 5-10% தள்ளுபடி என்று அல்வா குடுப்பார்கள் . இருப்பதிலேயே அதிக லாபம் துணிகளில் தான் கிடைக்கும். இப்படியே வீட்டு உபகரணங்கள், பர்னிச்சர்கள் என அனைத்திலும் அல்வா சலுகைகள் நிறைய உண்டு.

ஒவ்வொரு தீபாவளியின் போதும் இலவசங்கள், தள்ளுபடிகள் கிடைப்பதாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதிக லாபம் கிடைத்ததற்காக சார்ந்த நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

எப்படியோ, தீபாவளி இனிமையாக அமைந்தால் மகிழ்ச்சி தானே!

logo
Kalki Online
kalkionline.com