வீட்டுக் கடனை விரைவாக அடைக்க இதைச் செய்யுங்கள்!

Home Loan
Home loan
Published on

வீட்டுக் கடனை வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், வீட்டுக் கடனை விரைவிலேயே செலுத்த உதவும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

சொந்த வீடு என்பது பலருக்கும் தற்போது வரை கனவாகவே இருந்து வருகிறது. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீடு வைத்திருந்தால் பெரும் மதிப்பு இருக்கும். சொந்த வீடு கனவை நனவாக்க வங்கிக் கடன் தான் நம்மில் பலருக்கும் உதவியாக இருக்கிறது. அதற்கேற்ப பல தனியார் வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வசதியை அளிக்கின்றன. வீட்டுக் கடன் வாங்கும் போது சரியான வங்கியைத் தேர்வு செய்வதும், நமக்கு சாதகமான வட்டி விகிதத்தைப் பெறுவதும் மிக முக்கியமாகும். ஏதாவது ஒரு வங்கியில் வட்டியைப் பொருட்படுத்தாமல் அவசரத்திற்கு கடன் வாங்கி விட்டு, பின்பு அல்லல்படுவதை விட முன்பே திட்டமிட்டு வீட்டுக் கடன் வாங்குவது தான் சிறப்பு.

வீட்டுக் கடன் வாங்கியதும் மாதந்தோறும் தவணை முறையில் ஒரு குறிப்பிட்டத் தொகையை செலுத்தி, அக்கடனை அடைத்து வர வேண்டும். இந்தக் கடன் பல வருடங்களுக்கு நீடிக்கும். அதாவது, மாதச் சம்பளத்தில் ஒரு பகுதி கடனுக்கான தவணைத் தொகைக்கே போய் விடும். ஆகையால் முடிந்த அளவிற்கு விரைவாக வீட்டுக் கடனை அடைக்கத் திட்டமிட வேண்டும்.

கடன் வாங்கும் போது திருப்பி செலுத்தும் தவணைக் தொகைக்கான மொத்த ஆண்டுகளை அதிகரித்தால், மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை குறைவாக இருக்கும். அதேபோல் ஆண்டுகளைக் குறைத்துக் கொண்டால் தவணைத் தொகை அதிகமாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆண்டுகள் அதிகரிக்கும் போது வட்டி அதிகமாகும். ஆண்டுகள் குறைந்தால் வட்டித் தொகையும் குறையும். ஆகையால், தவணைத் தொகைக்கான ஆண்டுகளை குறைத்துக் கொள்வது கடன் விரைவிலேயே முடிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால், இதனை உங்களின் பொருளாதாரத் தேவையைப் பொறுத்து தான் தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு கடன் வாங்கும் எண்ணம் உள்ளதா? அப்போ நல்ல கடன் வாங்கலாமா!
Home Loan

இன்றைய சூழலில் பலரும் மாதத் தவணைச் சுமையைக் குறைத்துக் கொள்ள கடனுக்கான ஆண்டுகளை அதிகரித்துக் கொள்கின்றனர். இருப்பினும் மாதத் தவணைக்கு முன்னரே திட்டமிட்டுக் கொண்டு, குறுகிய கால வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் கடனை விரைவாக அடைக்கலாம். மாதச் சம்பளம் உயரும் பட்சத்தில், வங்கியை அணுகி மாதத் தவணையை அதிகரித்துக் கொள்ளும்படி செய்யலாம். இதன்மூலம் கடனை விரைவாக அடைக்க முடியும். வருடந்தோறும் கிடைக்கும் போனஸ் தொகையையும் அசலைத் திருப்பி செலுத்த சேமித்து வைத்துக் கொண்டால் கடனை அடைக்க உதவியாக இருக்கும்.

பொதுவாக வீட்டுக் கடனை அடைப்பது என்பது நீண்ட கால பொறுப்பாகும். ஆகையால், கடனுக்கு காப்பீடு பெறுவது அவசியமாகும். கடன் வாங்கும் போது வங்கிகளே காப்பீட்டை அளித்தாலும், தனியாக ஒரு காப்பீடு செய்வது நல்லது. ஏனெனில், வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும் போது, வங்கிகள் அளித்த காப்பீடு செல்லுபடியாகாது. இந்நேரத்தில் நாம் தனியே எடுத்திருக்கும் காப்பீடு தான் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com