

சமீப காலமாகவே டிஜிட்டல் உலகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது இணையத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். யாரை கேட்டாலும் இன்ஸ்டா பிரபலம், யூடியூப் பிரபலம் என்ற ஒரு அடைமொழியுடன் வாழும் அளவிற்கு இணையதளம் உருவெடுத்துள்ளது. இணையம் மூலமாகவே மக்களிடையே பேமஸாகி கோடி கணக்கில் சம்பாதிக்கும் பலர் நமக்கு தெரியும். இதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்து எத்தனையோ இளைஞர்கள் வீட்டில் இருந்த படியே வீடியோ போட்டும், பயனுள்ள வீடியோ போட்டும் லைக்ஸ், வியூஸ்களை அள்ளி பணத்தை சம்பாதிக்கின்றனர்.
யூடியூப் தளத்தில் வீடியோ மூலமாக ஒரு பதிவை நாம் பார்க்கமுடியும். ஏன் புகைப்படங்களை கூட வீடியோவாக எடிட் செய்து பலரும் இதில் பதிவிட்டு வருகின்றனர். தினசரி இந்த யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கானோர் வீடியோவை பதிவேற்றம் செய்கின்றனர். நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவையென்றால் எழுத்து வடிவிற்கு கூகுளையும், வீடியோ வடிவிற்கு யூடியூப் தளத்தை தான் பயன்படுத்துகிறோம். ஏன், சின்ன குழந்தைகள் கூட எளிதாக வாய்ஸ் சேர்ச் பட்டனை க்ளிக் செய்து தேவையான கருத்தை பதிவிட்டு வீடியோக்களை பெற்று வரும் காலமாக மாறிவிட்டது.
அப்படி இந்த யூடியூப்பில் வீடியோக்கள் போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலரும் இதில் எப்படி பதிவிட வேண்டும், அதன் வழிமுறைகள் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள். இதில் பகிரப்படும் ஒவ்வொரு வீடியோக்களையும் எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதற்கேற்ப அவர்களுக்கு பணம் கொட்டும்.
அந்த வகையில் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..
யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணம் யூடியூப் மூலம் கிடைக்காது. அதற்கு பதிலாக கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரம் மூலம் இருந்தே பணம் கிடைக்கிறது.
நீங்கள் பதிவிடும் வீடியோவின் இடையே ஒரு விளம்பரம் இயக்கப்படும்போது, பார்வையாளர்கள் அதைப் பார்க்கிறார்கள் அல்லது அதைக் கிளிக் செய்கிறார்கள் என்றால், உங்களுக்கு வருவாய் கிடைக்கும். இது விளம்பர வருவாய் (ad revenue) என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், CPM, RPM போன்ற காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
CPM என்பது Cost Per Mille என்பதைக் குறிக்கிறது. அதாவது ஒரு விளம்பரதாரர் 1,000 பார்வைகளுக்கு எவ்வளவு தொகை செலுத்துகிறார் என்பதே CPM.
RPM என்பது Revenue Per Mille ஆகும். இது ஒரு கிரியேட்டர் 1,000 பார்வைகளுக்கு உண்மையில் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதை குறிக்கும்.
இந்தியாவில் CPM பொதுவாக குறைவாக இருப்பதால், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது RPMவும் குறைவாக காணப்படுகிறது.
இந்தியாவில், 10 மில்லியன் பார்வைகளுக்கு சராசரி YouTube வருமானம் ரூ.80,000 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 வரை இருக்கும். இருந்தாலும் இதை சரியாக சொல்ல முடியாது. சில சேனல்கள் குறைவாக சம்பாதிக்கலாம் சிலவை அதிகமாக சம்பாதிக்கலாம். நீங்கள் பதிவிடும் கன்டென்ட் நிதி, தொழில்நுட்பம் அல்லது கல்வி போன்ற உயர் மதிப்பு வகைகளில் இருந்தால் அதற்கு வருமானம் அதிகம்.
அதேபோல், YouTube வருவாய் பார்வைகளின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது கிடையாது. வீடியோவின் நீளம், பார்வையாளர் இருப்பிடம் மற்றும் விளம்பரங்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளும் அவற்றுள் அடங்கும். உங்கள் வீடியோக்கள் வெளிநாட்டிலிருந்து அதிக பார்வைகளைப் பெற்றால், உங்கள் வருவாய் அதிகமாக இருக்கும்.
மேலும், AdSense மட்டுமே வருவாயின் ஆதாரம் கிடையாது. YouTube இன் மிகப்பெரிய பயனர்களில் பலர் விளம்பரங்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. பிராண்ட் ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள், இணைப்பு சந்தைப்படுத்தல் மற்றும் உறுப்பினர்களும் குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்குகின்றன. பெரும்பாலும், பிராண்ட் டீல்களிலிருந்து கிடைக்கும் வருவாய் AdSense-ஐ விட மிக அதிகமாக இருக்கும்.