
பொருளாதார உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமையைப் பெற்றிருப்பது, அமெரிக்கப் பணமான டாலர் தான். அனைத்துலக வர்த்தகங்களும் டாலரின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த வித்தியாசமானது அவ்வப்போது ஏறி இறங்கவும் செய்கிறது. சாமானிய மக்களுக்கு ரூபாயை விட டாலரின் மதிப்பு ஏன் அதிகமாக உள்ளது என்ற புரிதல் இல்லை. இந்தப் புரிதலை ஏற்படுத்த முயல்கிறது இன்றையப் பதிவு.
ஒவ்வொரு நாட்டிலும் பணத்தை ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கின்றனர். அவ்வகையில் அமெரிக்க பணத்தின் மதிப்பு டாலர் என்றழைக்கப்படுகிறது. இந்த டாலர் தான் உலகளவில் அதிக மதிப்பு வாய்ந்த பணமாக கருதப்படுகிறது. பொதுவாக நாணயத்தின் மதிப்பையும், நாணய மாற்று மதிப்பையும் யாருமே நிர்ணயம் செய்வதில்லை. இது பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது 1 டாலர் ஆனது ரூ.84.90-க்கு சமம் என்ற நிலையில் இருக்கிறது.
பணவீக்கத்தின் அளவு அதிகரித்தால், பணத்தின் வாங்கும் சக்தியானது குறைந்து, அதன் மதிப்பையும் குறைத்து விடுகிறது. பணத்தின் மதிப்பு குறைவதற்கு மற்றுமொரு முக்கியமான காரணம் என்றால் அது ரெப்போ வட்டி விகிதம். ரெப்போ விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பெரு முதலீட்டாளர்கள் கூட வங்கிக் கடன்களை வாங்கத் தயக்கம் காட்டுவார்கள். இப்படி இருக்கையில் சாமானிய மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இதன் விளைவாலும் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது.
டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு, நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் இன்னொரு காரணமாக அமைகிறது. நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் ஏற்றுமதி குறைவாகவும், வெளிநாட்டு பொருள்களின் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் பற்றாக்குறை அதிகரித்து விடும். இதன் காரணமாகவே டாலர் அதிகளவில் வெளியே செல்கிறது.
இந்திய மக்களிடம் இருக்கும் தங்கத்தின் மீதான மோகமும் ரூபாயின் மதிப்பு சரிவதற்கு காரணமாக உள்ளது. ஏனெனில் அதிக தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. பொதுவாக நாட்டில் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போனால், டாலரின் மதிப்பு உயரத்தான் செய்யும். உலக வங்கிகளில் இந்தியா வாங்கும் கடன் அளவும் இதில் ஒரு அம்சமாக கருதப்படுகிறது.
ஆக்கப்பூர்வமற்ற செலவுகளும் மிகப் பெரிய எதிரி தான். தனிமனிதனின் வீண் செலவுகள் எப்படி ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறதோ, அதே மாதிரி அரசு செய்யும் ஆக்கப்பூர்வமற்ற வீண் செலவுகள் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும்.
நம் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க நினைத்தால், பொதுமக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்திய ரூபாயும், டாலரின் மதிப்புடன் சமநிலைக்குச் செல்லும். இருப்பினும், இது அவ்வளவு சாதாரணமாக நடக்காது. ஏனெனில் வெளிநாட்டு பொருள்கள் பலவும் இந்திய மக்களிடத்தில் பரவிக் கிடக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை மிகப்பெரிய வியாபாரச் சந்தையாகவே கருதுகின்றன. இந்நிலை மாறுமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் தனிமனித மாற்றம் அவசியம் தேவை.