
வணிக நிதியை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஈக்விட்டி நிதி மற்றும் கடன் நிதி. ஈக்விட்டி நிதி (Equity finance) என்பது வணிகத்தில் பங்குதாரர்களுக்கு பங்குகளை வழங்குவதன் மூலம் நிதி திரட்டுவதாகும். கடன் நிதி என்பது வட்டிக்கு கடன் வாங்குவதாகும்.
ஈக்விட்டி நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீடு செய்யப்படும் நிதி. இது ஒரு வகையான முதலீட்டு முறையாகும். இது பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்கு சந்தையில் நேரடியாக பங்குகளை வாங்குவதன் மூலம் செய்யப்படும். இப்படி ஒரு பங்கில் முதலீடு செய்வதன் மூலம் நாம் அந்த நிறுவனத்தின் உரிமையில் ஒரு பகுதியை சொந்தமாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்ட அளவு பங்கை பெறும் தகுதியையும் பெறுவோம்.
ஈக்விட்டி நிதியில் முதலீடு செய்வதன் மூலம் கடன் நிதிகளை விட அதிக வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளைப் பெறலாம். பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது பங்கின் விலையும் பணவீக்கத்துடன் சேர்ந்து உயர வாய்ப்புள்ளதால் ஈக்விட்டி நிதிகள் பண வீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன.
ஈக்விட்டி நிதியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம், நிறுவனத்தின் உரிமையில் பங்கு பெறுவது மற்றும் பண வீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பது போன்ற நன்மைகள் இருந்தாலும் ஈக்விட்டி நிதிகள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. எனவே பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக முதலீட்டின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
ஈக்விட்டி ஃபண்டுகள்:
ஈக்விட்டி ஃபண்டுகள் என்பது பல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். இதில் நிபுணத்துவம் பெற்ற நிதி மேலாளர்கள் இந்த நிதிகளை திறம்பட நிர்வகிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் முதலீட்டாளர்களின் சார்பாக பங்குகளை வாங்கவும், விற்கவும் செய்கிறார்கள்.
ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் உள்ளன. முதலீட்டாளர்களால் வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அத்துடன் நிதி மேலாளர்கள் முதலீடுகளை நிர்வகிப்பதால் முதலீட்டாளர்களின் நேரம் விரயமாகாமல் இருக்கும். சிறிய தொகையில் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும்... இது போன்ற நன்மைகள் இருந்தாலும், பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக முதலீட்டின் மதிப்பை பாதிக்கக் கூடிய ஆபத்து உள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளை நிர்வகிப்பதன் காரணமாக அதற்கான நிர்வாகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. இது முதலீட்டின் வருமானத்தை குறைக்கலாம்.