தூத்துக்குடி உப்பு உற்பத்தியை பாதித்த வெள்ளம்!

Flood affected Tuticorin salt production!
Flood affected Tuticorin salt production!https://www.hindutamil.in

தென் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தின் உப்பு உற்பத்தியை முற்றிலுமாக புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்தியாவில் 2வது உப்பு உற்பத்தி நிலையமாக விளங்குவது தூத்துக்குடி மாவட்டம். இந்த மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 1200 உற்பத்தியாளர்கள் உப்பளங்களை அமைத்து உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆண்டிற்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் இத்தொழிலை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். எப்பொழுதும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உற்பத்தி நடைபெறுவது வழக்கம். பிறகு இருப்பு வைக்கப்பட்ள் உப்பு விற்பனை மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் மாதத்திற்குள் உப்பு உற்பத்தி முடிக்கப்பட்டு 10 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 17 மற்றும் 18ம் ஆகிய தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக பெருமளவில் தண்ணீர் தேங்கி உப்புகளை அடித்துச் சென்று இருக்கிறது. மேலும், உப்பளத்தை சேதப்படுத்தியும், உப்பைக் கரைத்தும் இருக்கின்றன. இதனால் உப்பள உரிமையாளர்கள் 100 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர். 6 லட்சம் டன் உப்பு சேதம் அடைந்திருக்கிறது.

இந்த நிலையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உப்பள உரிமையாளர் சங்கத் தலைவர் டி.சந்திராமேனன் கடிதம் அளித்துள்ளார். இதில் ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை உற்பத்தியாளர் சந்தித்திருக்கின்றனர். 6 லட்சம் டன் உப்பு வீணாகி இருக்கிறது. இதனால் வரக்கூடிய காலங்களில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தற்போது இருப்பில் உள்ள உப்பைக் கொண்டு வரும் மார்ச் மாதம் வரை பயன்படுத்த முடியும். வரக்கூடிய ஆண்டில் சரியான நேரத்தில் உப்பு உற்பத்தியை தொடங்கவில்லை என்றால் இந்தியாவில் உப்பு விற்பனை விலை உயரக்கூடும், தட்டுப்பாடும் ஏற்படும்.

மேலும், நஷ்டம் அடைந்த உப்பள உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 1.50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதற்காக வாங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி செலுத்த மூன்று மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com