
கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த ஜி-20 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி 20 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு 4வது அமர்வு கூட்டம் மொராக்கோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உலக பொருளாதார நடவடிக்கைகள், தடையில்லாத வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான வணிக செயல்பாடு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் கிரிப்டோ கரன்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அந்த வழிகாட்டு நெறிமுறையில், பொருளற்ற வணிகமான கிரிப்டோ கரன்சியினுடைய செயல்பாடுகளை தொடர்ந்து ஆராய்வது. அதே நேரம் கிரிப்டோ கரன்சி வழியாக எந்த வித பொருளாதார தவறுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்வது.
மேலும் கிரிப்டோ கரன்சியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை, உலகளாவிய ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம், நிலையான பொருளாதார நடவடிக்கை, தடையில்லா வர்த்தகம் ஆகியவற்றை செயல்படுத்துவது.
கிரிப்டோ கரன்சியினுடைய பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உலகளாவிய கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, பயங்கரவாத பரிவர்த்தனையில் இருந்து கிரிப்டோ கரன்சியை தடுக்கும் நடவடிக்கைகள், ஒத்துழைப்பு என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியாவினுடைய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவிட்சர்லாந்து நாட்டின் நிதி அமைச்சர் க்ரீன் கெல்லர் சட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஸ்விஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள இந்தியர்களுடைய பணம் குறித்த தகவல்கள் மேலும் கூடுதலாக பகிர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.