தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை தொடங்குகிறதா ஃபாக்ஸ்கான்?
தமிழ்நாட்டின் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது புதிதாக மின்சார வாகன உற்பத்தியிலும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு தொழில்துறையில் தொடர் முன்னேற்றத்தை அடைந்து வரும் மாநிலமாக திகழ்கிறது. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய பின்னடைவு சந்தித்தன. ஆனால் இந்தியா தொழில் துறையில் பாதுகாப்பை உறுதி செய்தது, அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு. கொரோனா சுகாதார அவசரநிலை காலகட்டத்திற்கு பிறகும் தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்த முதல் மாநிலமாக திகழ்கின்றது.
இந்த நிலையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 200 மில்லியன் டாலர் முதலீட்டில் மின்சார வாகன தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தூள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முதலமைச்சருடன் முதல் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியில் மிகப்பெரிய தொழிற்சாலை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புதிதாக மின்சார வாகன உற்பத்தியிலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய தொழிற்சாலை அமையும் பட்சத்தில் உற்பத்தி மேலும் அதிகரிக்க கூடும். இந்த திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். அதே நேரம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.