Penny Stocks பற்றிய முழு விவரங்கள் இதோ!

Penny Stocks
Penny Stocks
Published on

பங்குச்சந்தை, லாபம் ஈட்டும் ஒரு களமாக இருந்தாலும், அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். குறைந்த விலையில் அதிக லாபம் என்ற கவர்ச்சியான வாக்குறுதி, பலரை Penny Stocks பங்குகளின் பக்கம் இழுக்கிறது. ஆனால், இந்த ஈர்ப்புக்கு பின்னால் பல ஆபத்துக்கள் மறைந்துள்ளன. இந்த பதிவில் பென்னி ஸ்டாக்ஸ் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம். 

பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks) என்றால் என்ன?

பென்னி ஸ்டாக்ஸ் என்பது மிகவும் குறைந்த விலையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களின் பங்குகளைக் குறிக்கிறது. இந்த பங்குகளின் விலை பொதுவாக ஒரு பங்கிற்கு ரூ.10 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். இந்த குறைந்த விலைதான் முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற எண்ணம் பலரின் மனதில் எழுகிறது.

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதன் நன்மைகள்:

  • பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்ய குறைந்த தொகை போதுமானது. இதனால், சிறிய முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் தங்கள் காலடி எடுத்து வைக்க முடியும்.

  • இதன் விலை குறுகிய காலத்தில் பல மடங்கு உயர்ந்துவிடும். இதனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

  • குறைந்த விலையில் கிடைக்கும் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த முடியும். இதனால், ஒரு பங்கின் மதிப்பு குறைந்தாலும், மற்ற பங்குகளின் மதிப்பு அதிகரித்து மொத்த லாபத்தை பாதிக்காமல் இருக்கும்.

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதன் தீமைகள்:

  • பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது. இந்த பங்குகளின் விலை மிகவும் நிலையற்றதாக இருக்கும். ஒரு நாள் அதிகமாக இருக்கும் விலை, மறுநாள் மிகவும் குறைவாக இருக்கலாம். இதனால் முதலீடு செய்த தொகையை முழுமையாக இழக்கும் அபாயம் உள்ளது.

  • இத்தகைய ஸ்டாக்ஸில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பொதுவாக சிறிய அளவிலானவை மற்றும் குறைந்த அளவில் தகவல்களை வெளியிடும். இதனால், இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான தகவல்களைப் பெறுவது கடினமாக இருக்கும்.

  • சில குழுக்கள் பென்னி ஸ்டாக்ஸ் விலையை வேண்டுமென்றே உயர்த்தி அல்லது குறைத்து, சிறிய முதலீட்டாளர்களை ஏமாற்ற முயற்சிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உலகிலுள்ள முதன்மையான சிறிய நாடுகளும் அவற்றின் தனித்துவமான அம்சங்களும்!
Penny Stocks

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதற்கான முன்னெச்சரிக்கைகள்: 

இது போன்ற சிறிய ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை, வருவாய், செலவு, கடன், மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான விரிவான ஆய்வு செய்ய வேண்டும். பங்கின் விலை வரலாறு, வர்த்தக அளவு போன்ற தொழில்நுட்ப குறிகாட்டிகளை ஆய்வு செய்வதன் மூலம், பங்கின் எதிர்கால போக்கை கணிக்க முயற்சிக்கலாம்.

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்யும்படி தங்களது சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தி விற்பனையாளர்கள் ஆலோசனை வழங்கலாம். எனவே, அவர்களின் ஆலோசனையை விட, சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது நல்லது. 

ஒரே ஒரு பென்னி ஸ்டாக்கில் அதிக தொகையை முதலீடு செய்யாமல், பல்வேறு பென்னி ஸ்டாக்ஸில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஆபத்தை குறைக்கலாம். இவற்றில் முதலீடு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கத்தை தெளிவாக வரையறுக்க வேண்டும். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதை விட, நீண்ட காலத்திற்கு வளரக்கூடிய நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது.

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வது அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பை வழங்கினாலும், அதிக ஆபத்துடன் கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வதற்கு முன், அதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு, ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com