அதானி குழுமம் தனது கிரீன் எனர்ஜி நிறுவனத்தை விரிவுபடுத்த நிதி திரட்ட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின் உற்பத்தியின் தேவையை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மின் உற்பத்தியில் தீவிர ஆர்வம் செலுத்த தொடங்கி இருக்கிறது அதானி குழுமம்.
இதற்காக அதானி குழுமம், கிரீன் எனர்ஜி என்ற தனி நிறுவனத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் சூரிய ஆற்றல் மூலம் மின்சக்தி பெற்று இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக உருவெடுக்க முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அதானி கிரீம் எனர்ஜி குழுமத்தினுடைய வாரிய கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் கட்டமைப்பை விரிவு படுத்த முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக 38 சதவீதம் வரை கூடுதலாக நிதி திரட்ட திட்டங்கள் வகுக்கப்பட்ட உள்ளன. இதற்காக கடன் பத்திரம், வங்கி கடன், வெளிநாட்டு வங்கி கடன், டாலர் மற்றும் ரூபாய் வெளியீட்டு பத்திரம் ஆகியவற்றின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தை கையகப்படுத்தி 8,000 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது. தற்போது 2000 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது மட்டும் அல்லாது 19.8 ஜிகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்வதற்காக 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்பு பணிகளை மேற்கோள திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக 2030ஆம் ஆண்டில் 45 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இவ்வாறு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக மாற முயற்சி எடுத்து வருகிறது.