
தற்போது பரபரப்பான வாழ்க்கை முறையில் பைக் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். முன்பு ஒரு வீட்டிற்கு ஒரு பைக் என்று இருந்த நிலை மாறி வீட்டில் ஒவ்வொருவருக்கும் பைக் என்ற நிலை மாறி விட்டது. இதை கருத்தில் கொண்டு இருசக்கர வாகன நிறுவனங்கள் இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது மாடல் பைக்குகளை சந்தையில் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பாப் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி டேவிட்சன் செயல்படுகிறது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி மேலும் பார்க்கலாம்.
இருசக்கர வாகனங்களில் ஹார்லி டேவிட்சன் என்றாலே எப்போதும் தனி மவுசு தான். ஏனெனில் அதன் ஸ்டைல் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை வெகுவாக கவரும் தன்மை கொண்டது.
இது க்ரூஸர் ரக பைக் ஆகும், இது ஒரு எளிமையான, மினிமலிஸ்டிக் ஸ்டைலைக் கொண்டுள்ளது.இதில் மில்வாக்கி எய்ட் 117 கிளாசிக் 1,923 சி.சி. என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 91 எச்.பி. பவரையும், 156 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதன் விலை விவரம் வெளியிடப்படவில்லை. இதுதவிர, நடப்பு ஆண்டுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட சி.வி.ஓ. மாடல்களான சி.வி.ஓ. ஸ்டிரீட் கிளைட் மற்றும் சி.வி.ஓ. ரோடு கிளைட் ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது.
சி.வி.ஓ. ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களில் 1,983 சி.சி. மில்வாக்கி எய்ட் வி.வி.டி. 121 என்ஜின் இடம் பெற்றிருக்கும் எனவும், அதிகபட்சமாக 117 பி.எச்.பி. பவரையும், 188 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. வண்டியின் நீளம் 2,320மிமி, அகலம் 925 மிமீ, சீட் உயரம் 680 மிமீ. அதாவது குறைந்த இருக்கை உயரம், நேர்த்தியான வடிவமைப்பு, மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட் பாப், முந்தைய மாடல்களை விட வேகமானது. இந்த பைக்கின் வீல்பேஸ் 64.2 அங்குலங்கள் ஆகும், இது பைக்கின் ஸ்திரத்தன்மைக்கு உதவுகிறது.
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டர் சைக்கிள் கிரே, கருப்பு, மஞ்சள், ஐயன் ஹார்ஸ் மெடாலிக், பர்பல் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி பைக்கின் நிறத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலையாக ரூ.15.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.