
கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பார்கள். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல. வாடகை வீட்டில் வசிப்போர்களின் எண்ணிக்கை தான் நகரங்களில் மிக அதிகம். இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். ஏனெனில் விலைவாசி உயர்வு நம்மை அச்சுறுத்துகிறது. ஆகையால் தான் நகர மக்கள் பலரும் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் அல்லது ஃபிளாட்டுகளை வாங்குகின்றனர். இப்படியான சூழலில் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற பலருக்கும் உதவியாக இருப்பது வீட்டுக் கடன்தான். அவ்வகையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு, அதற்கான அனுமதி நிலையை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இப்போது காண்போம்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்பில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டாலும், அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது வீட்டுக் கடன் தான். இந்தக் கடனின் முக்கியத்தும் பற்றி நகர மக்களுக்கு நன்றாகவே தெரியும். சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவுக்காக வாழ்நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கும் ஆண்கள் இங்கு ஏராளம்.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது மிகவும் எளிதாகி விட்டது. இருந்த இடத்திலேயே ஆன்லைனில் கடன் வாங்கும் வசதிகளும் இந்த டிஜிட்டல் யுகத்தில் வந்து விட்டது. இப்படி இருக்கையில் நீங்கள் ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால், அதற்கான அனுமதி நிலையை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த வசதி ஆன்லைனிலேயே கிடைக்கிறது.
வீட்டுக் கடன் பெற பல்வேறு செயல்முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் வங்கிகளின் அனுமதி நிலை. வீட்டுக் கடனுக்கு வங்கிகள் ஒப்புதல் அளித்ததா என்பதை உங்களின் விண்ணப்ப குறிப்பு எண், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, கடன் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் கேட்கும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால், உங்களின் வீட்டுக் கடன் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
வீட்டுக் கடன் ஒப்புதல் மற்றும் அனுமதி நிலையைத் தெரிந்து கொள்ள ஒருசில வங்கிகள் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணை மட்டுமே ஏற்றுக் கொண்டு, தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் மட்டும் கூடுதல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிறந்த தேதியையும் கேட்கின்றன.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியில் நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால், கடனுக்கு விண்ணப்பிப்பது மிக எளிது. வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங் மூலமாகவே வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும், கடன் நிலையைத் தெரிந்து கொள்ளவும் முடியும். இதற்காகவே நெட் பேங்கிங்கில் கடன் பிரிவு என்ற வசதி உள்ளது.
வீட்டுக் கடனில் பெரிய தொகையை கடனாக வாங்குவோம் என்பதால், திட்டமிடுதல் அவசியமாகிறது. ஏனெனில் தொகை அதிகம் என்பதால் வட்டியும் அதிகமாக இருக்கும். ஆகையால் வீட்டுக் கடனுக்கான நிலையைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.