
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு வாழ்க்கையில் நீண்டகால திட்டமிடலோடு செயல்படும் நபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய 25 தனிமனித நிதிக் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்!
தனிமனித நிதிக் குறிப்புகள் 25 எவை?
வருமானத்தை விட குறைவாக செலவழியுங்கள். சேமித்த பணம், சம்பாதித்த பணத்திற்கு சமமானது.
சேமிப்பிற்கு பின்பே செலவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேமிக்கப் பாருங்கள். மாதம் 75% சம்பாதித்த பணத்தைச் சேமிக்கும் நபர்கள் உள்ளார்கள்.
சேமிப்பு மட்டும் போதாது. சேமித்த பணம் பெருகாது. பணத்தைப் பெருக்குவதற்கு முதலீடு அவசியம். முதலீட்டின் மூலமே பணவீக்கத்தினை நம்மால் சமாளிக்க முடியும்.
முதலீடு பணத்தைப் பெருக்குவதற்கு. காப்பீடு சேமித்த பணத்தை காப்பதற்கு. இரண்டின் குறிக்கோளும் வேறு வேறு.
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு; வளரும் விகிதம், பணத்தை இழக்கும் அபாயம், நீர்ப்புத்தன்மை. எந்த ஒரு முதலீட்டாலும், இந்த மூன்றையும் வழங்க இயலாது. குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டை தேர்ந்தெடுங்கள்.
மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம், திடீர் மருத்துவ செலவுகளை எளிதில் சமாளிக்க முடியும். கடனில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும்.
காலவரையற்ற காப்பீட்டுத் திட்டம் என்பது மிகவும் முக்கியம். அதன் மூலம், குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இறந்தால், குடும்பம் எதிர்காலத்தினை சமாளிக்க முடியும்.
அவசர கால நிதி வைத்திருங்கள். அதன் மூலம், அவசர காலங்களில் கடன் வாங்காமல், முதலீட்டில் கை வைக்காமல் சமாளிக்க உதவும். குறைந்தபட்சம் 3- 6 மாதங்களுக்கான செலவு அல்லது 12 மாதங்களுக்கான செலவு வரை அவசரகால நிதியாக வைத்திருக்கலாம்.
கடன் அட்டையைத் தவிருங்கள். (Debit Card)பற்று அட்டையைப் பயன்படுத்துங்கள்.
கடனை எந்த ரூபத்திலும் தவிருங்கள். எந்த ஒரு பொருளையும் திட்டமிட்டு பணத்தை சேமித்து, வாங்கப் பாருங்கள்.
கூட்டு வட்டி முதலீடுகளில் நடுவில் எடுக்காதீர்கள். அது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.
பரவலாக முதலீடு செய்யுங்கள். உங்களுடைய எல்லா முட்டைகளையும், ஒரே கூடையில் போடாதீர்கள்.
குறிக்கோளுக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள். குறுகிய கால குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. நீண்ட கால குறிக்கோள்களுக்கு பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் சிறப்பானவை.
பங்கு சந்தையில் பங்குகளைத் தேர்ந்தெடுப்பது கடினம். அது உங்களுக்கு கைவல்யமாகுமெனில், அதில் இறங்குங்கள். இல்லையேல், அதற்கு மாறாக பங்கு சந்தை குறியீடு சார்ந்த, பங்கு சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகள் பரவலாக முதலீடு செய்வது சிறப்பானது.
உங்களுடைய பெரும் செலவுகளான, வீடு மற்றும் வாகனத்தை தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுங்கள். பெரிய கடனில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
வாடகைக்கு இருப்பதா, சொந்த வீடு வாங்குவதா என்பதை, அந்த ஊரில் இருக்கப் போகும் காலம், எதிர்காலத் திட்டம், வீட்டிற்கு ஆகும் மாதாந்திர செலவு அல்லது வாடகை செலவு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் போன்ற பலகாரணிகளைக் கொண்டு முடிவெடுங்கள்.
வரவு செலவு கணக்கு வைத்திருங்கள். செலவுகளைத் திட்டமிட்டு குறைக்கப் பாருங்கள்.
நிதி திட்டமிடல்(பட்ஜெட்) அவசியம். எந்த ஒரு செலவும் நிதி திட்டமிடலின்படியே அமைய வேண்டும். ஒரு மாதம் உணவகத்தில் உண்ண ரூபாய். 1,000 எனில், அந்த நிதி திட்டமிடலைத் தாண்டி , செலவழிக்க கூடாது.
எந்த ஒரு செலவையும், மனைவியுடன் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். கணவன் மனைவியிடையே ஒளிவு மறைவு கூடாது.
கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன். கடன் வாங்குவதை தவிருங்கள். கடன் வாங்கியே தீர வேண்டுமெனில், நல்ல கடன்களான வீட்டுக் கடன் (அரசின் வரி சலுகை உண்டு, அத்தியாவசிய தேவை), தொழிற் கடன் , கல்விக் கடன்(வருமானத்தை எதிர்காலத்தில் பன்மடங்கு பெருக்கும்) வாங்கலாம். அவற்றைக் கூட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைக்கப் பாருங்கள்.
உங்களுக்கு புரிந்த முதலீடுகளில் மட்டும், இறங்குங்கள். இல்லையேல், பணத்தை இழக்க நேரலாம்.
சூதாடுவதை தவிருங்கள். சூதும் வாதும் வேதனை செய்யும்.
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்டப் பழக்கங்களை தவிருங்கள். அவை பணத்தை விரயம் செய்வது மட்டுமன்றி, உடலையும் கெடுக்கின்றன.
தேவைக்கும் (need), வேண்டுதலுக்கும்(want) உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள். உணவு, உடை, இருப்பிடம், தொலைதொடர்பு , போக்குவரத்து போன்றவை தேவைகள். மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல விரும்புவது வேண்டுதல். தேவையைச் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.