ஆண்ட்ராய்டு ஏடிஎம்: இது புதுசா இருக்கே!

Android ATM
Android ATM
Published on

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி இருக்கிறோமோ? இனிமேல் பயன்படுத்தப் போகிறோம். ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன‌. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்தாமல் யாராலும் இருக்கவே முடியாது. ஏனெனில், அனைவருக்கும் வங்கிக் கணக்குடன் கூடிய ஒரு ஏடிஎம் கார்டு உள்ளது. பணம் எடுக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அலைச்சலை ஏடிஎம் கார்டுகள் குறைக்கின்றன. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. ஆனால், இப்போது தெருவுக்குத் தெரு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. மக்கள் பயன்பாட்டிற்கு இந்தத் தொழில்நுட்பம் தற்போது பேருதவியாக இருக்கிறது.

எந்த நேரத்திலும் பணம் எடுக்க உதவும் ஏடிஎம் இயந்திரத்தில் அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆண்ட்ராய்டு அம்சத்தில் இயங்கும் புதிய ஏடிஎம் இயந்திரங்கள் இந்தியாவிற்கு வரவுள்ளன. இதுநாள் வரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மொபைல் போன்களை நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது ஆண்ட்ராய்டு ஏடிஎம்-கள் நமக்கு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றன.

ஜப்பானைச் சார்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பணத்தை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு வங்கிச் சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குகின்றன. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்த ஏடிஎம் இயந்திரத்தை தயாரித்துள்ளது ஹிட்டாச்சி நிறுவனம்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி யுபிஐ முறையில் பணத்தை எடுத்தல் மற்றும் செலுத்துதல், கிரெடிட் கார்டு விண்ணப்பித்தல், தனிநபர் கடனுக்கான விண்ணப்பம், வங்கிக் கணக்கைத் தொடங்குதல், காப்பீடு மற்றும் பாஸ்ட்டேக் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆண்ட்ராய்டு ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குகின்றன. வங்கிக் கிளைகள் இல்லாத கிராமப்புறங்களில் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். ஆவணங்கள் ஏதுமின்றி யுபிஐ மூலம் தொடுதிரையைப் பயன்படுத்தி வங்கிச் சேவைகளைப் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க முடிகின்றது.

இதையும் படியுங்கள்:
கடன் வசதியை எளிதாக்கும் ULI அம்சம்!
Android ATM

ஏடிஎம் இயந்திரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க முக்கிய காரணமே 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைந்திருப்பது தான். அதே போல் இந்த ஆண்ட்ராய்டு ஏடிஎம் இயந்திரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் மக்கள் பயன்பாட்டுக்காக இயங்கும். சுய சேவை வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம் இயந்திரங்களை நாட்டில் நிறுவுவதன் மூலம், வங்கிச் சேவைகள் பெருமளவு விரிவாக்கம் பெறும்.

தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இதன் வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆண்ட்ராய்டு ஏடிஎம். இனி வரும் காலங்களில் வீட்டுக்கு வீடு ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் வசதி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com