கேட்பாரற்றுக் கிடக்கும் நமது முதலீடுகளின் பணத்தைக் கோருவது எப்படி?

கேட்பாரற்றுக் கிடக்கும் நமது முதலீடுகளின் பணத்தைக் கோருவது எப்படி?

நாம் ஒரு காலத்தில் முதலீடு செய்து பின்பு மறந்து போன, கேட்பாரற்று கிடக்கும் முதலீடுகளின் பணத்தைக் கோருவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஒரு வங்கியில் உள்ள வைப்பு நிதியோ, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கோ எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லாத போது பின்வருமாறு படிப்படியாக அதன் நிலை மாறுகிறது.

வங்கிக் கணக்கில் ஒரு வருடம் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அது செயலற்றக் கணக்கு (inactive) என்று குறிக்கப்படும்.

வங்கிக் கணக்கில் இரண்டு வருடங்கள் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அது முடக்கப்பட்ட கணக்கு (dormant ) என்று குறிக்கப்படும்.

வங்கிக் கணக்கில் 10 வருடங்கள் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அதில் உள்ள பண பாக்கியானது , பாரத ரிசர்வ் வங்கியின் முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (depositors education and awareness fund) பட்டுவாடா செய்யப்படும். 31, மார்ச் 2019லேயே இந்த நிதியில் கோரப்படாத பணமாக 25 ஆயிரம் கோடி இருந்தது. தற்போது இது 35 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் வங்கி கணக்கில் ஒவ்வொருவரும் தங்களது முன்மொழியப்படுபவர் (nominee) விவரத்தை சரியாக பதிவு செய்து வைத்திருத்தல் நல்லது. அதன் மூலம் இத்தகைய கணக்குகளுக்கு முன்மொழியப்பட்டவர் , தகுந்த அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து பணம் கோருவது எளிதாக இருக்கும்.

உட்காம் (UDGAM) இணையதளம்:

இத்தகைய முடக்கப்பட்ட கணக்குகளில் பணம் கோருதலை பாரத ரிசர்வ் வங்கி எளிமையாக்கி உள்ளது. முன்பு இத்தகைய முடக்கப்பட்ட கணக்குகளுக்கு அந்தந்த வங்கிகளை நாம் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். இப்போது ஒரே இணையதளம் வாயிலாக நமது எல்லா முடக்கப்பட்ட கோரல்களைச் செய்து கொள்ளலாம்.

பாரத ரிசர்வ் வங்கியின் முடக்கப்பட்ட கணக்குகளை கோரும் இணையதளத்தின் சுட்டி பின்வருமாறு. இது உட்காம் எனப்படுகிறது. UDGAM (Unclaimed Deposits – Gateway to access information). https://udgam.rbi.org.in/unclaimed-deposits/

UDGAM Portal
UDGAM Portal

இந்த இணையதளத்தில் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்ட கைப்பேசி எண் மற்றும் பான் அட்டை ஆதார் அட்டை போன்ற நம்மை அடையாளப்படுத்தும் ஆவணங்களுடன் பதிவு செய்து கொண்டு, நமது முடக்கப்பட்ட கணக்கில் உள்ள பணத்தின் கோரலைச் செய்யலாம். பணக் கோரல்கள் 15 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்பது அருமையான ஒரு விஷயம்.

தற்போது பின்வரும் வங்கிகள் மட்டுமே இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன. மற்ற வங்கிகள் எதிர்காலத்தில் இதில் இணையும்.

  1. பாரத ஸ்டேட் வங்கி

  2. பஞ்சாப் நேஷனல் வங்கி

  3. சவுத் இந்தியன் வங்கி

  4. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

  5. தனலட்சுமி வங்கி

  6. டிபிஎஸ் வங்கி

  7. சிட்டி வங்கி

இதில் தற்போது இல்லாத மற்ற வங்கிகளுக்கு நாம் தனித்தனியே தொடர்பு கொண்டு நமது பணத்தைக் கோர முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com