

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்த சில தினங்களில் இருந்த இடம் தெரியாமல் பணம் கரைந்து விடுகிறது. இதற்கு காரணம், சரிவர திட்டமிடாமல் பணத்தினை செலவு செய்வதுதான். சரியான முறையில் பணவரவினை திட்டமிடாமல் விட்டால், எதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் ? என்று கணக்கில்லாமல் செலவு செய்து பணம் முற்றிலும் கரைந்து விடுகிறது. இதனால் , மாதக் கடைசி தினங்களில் பணம் இல்லாமல் திண்டாட வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பணம் இல்லாமல் திண்டாடினால் , எதிர்கால வாழ்க்கைக்கு எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் போய்விடும். சேமிப்பு இல்லாத வாழ்க்கை என்று வேண்டுமானாலும் பொருளாதாரத்தில் மோசமான சூழலில் சிக்கிக் கொள்ள வைக்கும். அந்த சுழலில் இருந்து வெளியே வருவது கடினமான செயலாக பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பணத்தினை தேவைக்கு ஏற்ப செலவு செய்து , அதில் ஒரு சேமிப்பையும் ஏற்படுத்தினாலும் பொருளாதாரத்தில் சங்கடமற்ற சூழ்நிலைகள் உருவாகும். தனி மனித பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். அதற்கான சில செயல்முறைகள் பற்றி ஆராயலாம்.
1. அத்தியாவசிய தேவைகள்:
சம்பளம் கிடைத்த உடன் முதலில் செய்ய வேண்டியது , அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் ஒதுக்குவது தான் . இதில் மளிகை சாமான் , மருத்துவம் மற்றும் மாத்திரை செலவுகள் , பால், கரண்ட் பில் , டிவி மற்றும் போன் ரிசார்ஜ்கள் , கேஸ் , மாதம் முழுக்க பெட்ரோல் டீசல் போட தேவையான பணம் அல்லது பொது போக்குவரத்து செலவுகள், குழந்தைகள் ஸ்கூல் பீஸ் , வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் வாடகை, கிரெடிட் கார்ட் பில், ஏதேனும் இஎம்ஐ இருந்தால் அவற்றிற்கும் பணத்தை ஒதுக்கி வையுங்கள். கிட்டத்தட்ட உங்களின் சம்பளத்தில் பெரும் பகுதி இங்கே போகலாம். ஆனால், இவை அவசியத் தேவை என்பதை கருத்தில் வைக்கவும். அதே நேரம் எதில் சிக்கனம் செய்ய முடியும்? என்பதையும் ஆராய்ந்து செயல்படுத்துங்கள்.
2. அவசரத் தேவைக்கு பணம் ஒதுக்குங்கள்:
திடீரென்று வேலை உங்களை விட்டு போகலாம் அல்லது ஏதேனும் அவசரத் தேவை தீடீர் என்று வரலாம் , அதற்கு பணம் கட்டாயத் தேவை. அந்த நேரத்தில் பணத்திற்கு சிரமப்படாமல் இருக்க , உங்களின் சம்பளத் தொகை போன்று மூன்று மடங்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கென மாதத்திற்கு 10% சம்பளத்தில் ஒதுக்கி சேர்த்து வையுங்கள்.
சேர்த்த பின்னர் அந்த பணத்தை தனியாக ஒரு அக்கவுண்டில் வைத்துக் கொள்ளுங்கள். தீடீர் மருத்துவ செலவுகளுக்கு தனியாக ஹெல்த் இன்சூரன்ஸ் ஒன்றை குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள். இது திடீரென்று நீங்கள் கடன்காரன் ஆவதிலிருந்து தப்பிக்க உதவும்.
3. திட்டமிடாத தீடீர் செலவுகள்:
உங்கள் வாகனம் திடீரென்று ரிப்பேர் ஆகலாம் , வீட்டில் உள்ள டிவி , வாஷிங் மெஷின் போன்ற ஏதேனும் ஒரு சாதனம் மக்கர் செய்யலாம். திருமணம் , பிறந்தநாள், காதுகுத்து ,சடங்கு என்று மொய் வைக்கும் செலவுகள் வரலாம். இவை அவசரகால செலவுகள் இல்லை என்றாலும் இதற்கென ஒரு 10% தொகையை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
4. எதிர்கால சேமிப்பு:
ஒருவரின் சம்பளத்தில் ஒரு மாதத்தில் அத்தியாவசிய செலவுகளுக்கு 50% போய் விடும். அவசரத் தேவைகளுக்கு 10% , திட்டமிடாத தீடீர் செலவுகள் 10% என்று வைத்துக் கொண்டால் மீதமுள்ள 30% எதிர்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள். எப்போதும் தங்கம் என்பது நம்பிக்கையான முதலீடு, அதை ஆபரணமாக இல்லாமல் காசுகளாக சேமித்து வையுங்கள். SIP அல்லது வருமானம் தரும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை பற்றி தெளிவு இருந்தால் அதில் கூட முதலீடு செய்யலாம்.
5. பணத்திற்கான திட்டமிடல்:
உங்களது சம்பளத்தை வைத்து இப்படி ஒவ்வொரு மாதமும் திட்டமிட்டு செலவு செய்யுங்கள். இந்த திட்டமிடல் செய்ய உங்களது வருமானம் போதவில்லை என்றால் உங்களது செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் உங்களது வருமானத்தை அதிகரிக்கும் வழியை தேடுங்கள். சரியான திட்டமிடல் இருந்தால் உங்கள் பொருளாதாரம் நிலையாக இருக்கும்.