GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, சந்தேகத்திற்கு இடமின்றி சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான வரி சீர்திருத்தங்களில் ஒன்றாகும். ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மத்திய மற்றும் மாநில அளவில் பல மறைமுக வரிகளை மாற்றி இந்திய வியாபார சந்தையை ஒருங்கிணைக்கும் விதமாக, ஒரு வெளிப்படையான வழிமுறையை உருவாக்கியது. இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டியின் தாக்கம் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனப் பார்க்கலாம்.
1. வரி கட்டமைப்பை சீர்படுத்தியது: ஜிஎஸ்டியின் அறிமுகம் வரிகளுக்கு வரிகள் விதிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றியது. இதன் மூலமாக அனைத்து சரக்குகளையும் சேவை வரியின் கீழ் கொண்டு வந்ததால், வரிக் கட்டமைப்பு நெறிமுறைப்படுத்தப்பட்டு வணிகர்களின் சுமையைக் குறைத்தது. இதனால் வரி ஏய்ப்பு குறைந்து, முறையாக அனைவரும் வரி செலுத்த வழிவகுத்தது.
2. நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்: ஜிஎஸ்டி வரிவிதிபால் மாநிலங்களுக்கு இடையே இருந்த தடை நீங்கி, போக்குவரத்து நேரம் மற்றும் செலவு குறைந்ததால், மற்ற மாநில எல்லை வழியாக தடையின்றி சரக்குகளை நகர்த்த உதவியது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட வரிக்கட்டமைப்பானது வர்த்தகத்தை உயர்த்தி, பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தது.
3. முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரம்: வணிகங்கள் தங்களுடைய வரி செயல்பாடுகளை முறைப்படுத்தவும், வரி விதிகளுக்கு இணங்கி நடக்கவும் ஜிஎஸ்டி ஊக்குவித்தது. GST பதிவு செய்வது, ரிட்டன் தாக்கல் மற்றும் விலைப்பட்டியல் உள்ளீடு செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டல்கள் கொண்டு வந்தது மூலமாக அனைத்தும் எளிதானது. இது கருப்பு பொருளாதார நடவடிக்கைகளைக் குறைத்து அரசாங்கத்திற்கும் வருவாயை அதிகரித்தது.
4. எளிய வணிகம்: ஜிஎஸ்டி, பல வரி தாக்கல்களை மாதாந்திர வருமானத்துடன் மாற்றியதன் மூலம், வணிகர்களுக்கான வரி இணக்க செயல்முறை எளிதாகியுள்ளது. இது நிர்வாக சிக்கல்களைக் குறைத்து வணிகங்களின் செயல்பாட்டை விரிவுபடுத்த உதவியது. மாநிலங்கள் முழுவதிலும் ஒரே மாதிரியான வரிக் கட்டமைப்பு, ஒரு சமத்துவத்தை உருவாக்கி, இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கிறது.
5. துறைசார் தாக்கம்: ஜிஎஸ்டி, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. LOGISTICS மற்றும் WAREHOUSE போன்ற துறைகளில் நுழைவுத் தடைகளை அகற்றியதன் மூலமாக, பொருட்களை விநியோகம் செய்வது மேம்பட்டது. உற்பத்தித் துறையில் வரிச்சலுகைகள் காரணமாக Make in India திட்டம் பயன்பாடு ஜிஎஸ்டியால் உயர்ந்துள்ளது.
இப்படி ஜிஎஸ்டி பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தொழில்நுட்பக் கோளாறு, வரி விகிதத்தில் அடிக்கடி மாற்றங்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும் இத்தகைய சவால்களை எதிர்கொண்டு, ஜிஎஸ்டி மூலமாக ஒரு சீரான வரி செயல்பாட்டை உறுதிப்படுத்த, தேவையான சீர்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என நம்பப்படுகிறது.