துபாயிடமிருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா.
அமெரிக்கா உலக அரசியலில் முக்கிய அங்கம் செலுத்துவதற்கு காரணம் அமெரிக்காவினுடைய ரெக்கமாக கருதப்படும் டாலர் தான். இது பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் உள்ளதும், மேலும் உலகளாவிய எல்லை தாண்டிய வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்காற்றுவதுமே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதே நேரம் இந்தியா ரூபாய் மூலம் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு நாடான இந்தியா, 85 சதவீதம் அளவிற்கு இறக்குமதி மூலம் கச்சா எண்ணெயை பெறுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூபாயை முன்னிலைப்படுத்த தொடர் முயற்சி மேற்கொள்கிறது. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட போது ரஷ்யாவிடமிருந்து ரூபாயில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக த்திடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய்க்கு ரூபாயில் பணம் செலுத்தியிருக்கிறது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வாங்கியது. மேலும் இந்த வர்த்தகம் ரூபாயில் நடைபெற்றது. இதற்காக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எல்லை தாண்டிய வர்த்தகத்தில் ரூபாயை முன்னிலைப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயரும், செலவு குறையும். இதனால் இந்தியா பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று சொல்கின்றனர்.