புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு வரி உயர்வு: பாதிப்பை சந்திக்கும் உலக நாடுகள்!
உலகில் பயன்படுத்தப்படும் அரிசிகளில் இந்தியாவிலிருந்தே 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டிருக்க கூடிய அரிசி பஞ்சத்தின் காரணமாக ஒன்றிய அரசு தற்போது புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியாவில் நிலவி ஒரு பருவநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப்பொருட்கள் உற்பத்தி மிகப் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டிருக்கிறது. மேலும் உற்பத்தி பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் உணவுப் பொருட்களினுடைய விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாகவும், இந்திய மக்களுக்கான உணவு தேவையை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. குறிப்பாக பாசுமதி இல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு தடை, மேலும் கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு என்று அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து 40 சதவீதம் அரிசி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அரசின் கட்டுப்பாடு மற்றும் தடையின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் இது முக்கிய பிரச்சினையாகவும் மாறி இருக்கிறது.
அதேசமயம் பாசுமதி இல்லாத மற்ற வகை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புழுங்கல் அரிசி பயன்பாடு அதிகரித்தது. இதனால் ஏற்றுமதியும் உயர தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது புழுங்கல் அரிசி கையிருப்பை இந்தியாவில் உறுதி செய்ய 20 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்து உத்திரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் அரிசியினுடைய விலை மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.