தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
இந்தியாவின் தனி நபர் வருமான கணக்கீட்டை விட தமிழ்நாட்டின் இருக்கக்கூடிய தனி நபருடைய வருமானம் கணிசமான உயர்வை சந்தித்திருப்பதாக தமிழ்நாட்டினுடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 2022 - 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதம் வளர்ச்சியை கண்டிருக்கிறது. 2021- 2022 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தன்னுடைய பங்களிப்பை செலுத்தி இருக்கிறது.
நாட்டின் பிற பகுதிகளில் நிலவக்கூடிய விலைவாசியை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு தனி நபரினுடைய வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம் 98 ஆயிரத்து 374 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாடு சராசரி ஆண்டு வருமானம் கணக்கின் அடிப்படையில் கணிசமான உயர்வை கண்டிருக்கிறது.
மேலும் மாநிலத்தினுடைய பணவீக்கம் என்பது குறியீட்டு எண் 2022 -2023 ஆம் நிதியாண்டில் 5.9 ஆக உள்ளது. இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் உடைய பங்கு 9.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதம் வளர்ச்சியை கண்டிருக்கிறது.
இவ்வாறு இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக திகழ்கிறது. மற்றும் வரி வருவாய் கணக்கிட்டு அடிப்படையில் தமிழ்நாடு வளர்ச்சியை கண்டிருக்கிறது. தமிழ்நாட்டை விட கூடுதலான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்திருக்கிறது.
மேலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்து இருப்பதன் மூலம் பல்துறை சார்ந்த வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.