கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

Bitcoin
Crypto Currency
Published on

பொருளாதார வளர்ச்சி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீப காலமாக பொருளாதார உலகில் கிரிப்டோ கரன்சி என்ற பெயர் அடிபடுகிறது. இதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் பலமடங்கு இலாபம் கிடைக்கும் என்றும் சிலர் சொல்கின்றனர். இது உண்மை தானா? கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது சரியான முதலீட்டு உத்தியாக இருக்குமா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

முதலீடு செய்வதென்றால் முன்பெல்லாம் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மட்டுமே பலரது தேர்வாக இருந்தது. ஆனால் இப்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி மற்றும் கிரிப்டோ கரன்சி என முதலீட்டு வாய்ப்புகள் பரவலாக அதிகரித்து உள்ளன. இதில் மற்ற முதலீடுகளை விடவும் சற்று வித்தியாசமானது கிரிப்டோ. சமீப காலங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை நம்மால் காண முடிகிறது. இருப்பினும் முதலீடு செய்தவர்கள் ஒருவித பயத்துடன் இருப்பதையும் நாம் இங்கு மறக்க வேண்டாம். ஏனெனில் புதிதாக ஒரு முதலீட்டு வாய்ப்பு வரும்போது, அது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்குமல்லவா!

டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படும் கிரிப்டோவில் முதலீடு செய்வது, மற்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக ரிஸ்க் உடையது. ஏனெனில் இலாபம் கிடைத்தால் நம்மை உச்சத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு அதிகமாக கிடைக்கும். அதுவே நஷ்டம் ஏற்பட்டால் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதைப் போல் மொத்த முதலீட்டையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இப்படியான சூழலில் நாம் மீண்டு வருவது கூட கடினமாகி விடும். கிரிப்டோ முதலீடு சரியான முதலீட்டு வாய்ப்பா என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதேநேரம் நம்பகத்தன்மைக்கும் கிரிப்டோ முதலீட்டுக்கும் சம்மந்தமே இல்லை. இதில் நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நஷ்டம் ஏற்பட்டால் மீள்வது கடினம்.

உலகின் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கிரிப்டோ கரன்சி பிட்காயின். கடந்த 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிட்காயின், தற்காலத்தில் அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. இதன் சராசரி மதிப்பும் அடிக்கடி உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், எப்போது சரியும் எப்போது உயரும் என்று யாராலும் கணிக்க முடியாத சூழல் தான் இன்றளவும் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்:
முதலீட்டை விட முதலீடு செய்யும் நேரம் தான் முக்கியம்! ஏன் தெரியுமா?
Bitcoin

ஒருவேளை கிரிப்டோவில் முதலீடு செய்ய நினைத்தாலோ அல்லது ஏற்கனவே முதலீடு செய்திருந்தாலோ, நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. கிரிப்டோ முதலீட்டின் மூலம் இலாபம் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்படி இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டால், பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவும், மீண்டும் நம் வாழ்வை நடத்துவதற்கும், நம்பகத்தன்மை வாய்ந்த வேறொரு முதலீட்டையும் தொடங்குங்கள். கிரிப்டோ கைவிட்டாலும், இந்த முதலீடு நம்மைப் பாதுகாக்கும்.

நடுத்தர வர்க்கத்தினர் அதிக இலாபத்திற்கு ஆசைப்படாமல், பாதுகாப்பான முதலீட்டை நோக்கி உங்கள் பாதையைத் திருப்புவது நல்லது. ஏனெனில், கிரிப்டோ கரன்சி முதலீடுகள் என்ற பெயரில் இங்கே மோசடிகளும் நடக்கின்றன என்பதை நாம் மறக்க வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com