
அவசரத் தேவை ஏற்படும் போது அனைவருக்கும் கடன் வாங்க வேண்டிய நிலமை உண்டாகும். இந்நேரத்தில் கடனை எங்கு, எப்படி வாங்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதில் முக்கியமாக நாம் உற்று நோக்க வேண்டியது வட்டி விகிதத்தைத்தான். குறைவான வட்டியில் கடன் வாங்குவது நம்முடைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றதாக அமையும். அவ்வகையில் நம்முடைய முதலீட்டுத் திட்டத்தின் மீது கடன் வாங்குவது ஏற்புடையதாக இருக்குமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பொருளாதார உலகில் மிக எளிதாகவே கடன் கிடைக்கிறது. அதற்காக கண்ணைக் கட்டிக் கொண்டு அதிக வட்டியில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு கடனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளையும் மனதில் கொள்ள வேண்டும். உங்களுக்கு அவசரமாக கடன் தேவைப்படும் நேரங்களில், முதலீடுகளின் மீது கடன் பெறுவதைப் பற்றியும் சிந்திக்கலாம்.
இன்று அதிகம் பேர் சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். அவ்வகையில் அவசர காலங்களில் இந்த முதலீட்டுத் திட்டங்களை கடனுக்காகவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் இதில் கடன் அளவு, உங்கள் முதலீட்டைப் பொறுத்தே அமையும். மற்ற கடன்களைக் காட்டிலும் தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
பலரும் கடன் என்றாலே நகைகளை அடகு வைப்பது அல்லது தனிநபர் கடன் என நினைக்கின்றனர். ஆனால் முதலீட்டுத் திட்டங்கள் கூட குறைந்த வட்டியில் கடனைக் கொடுக்கும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. பத்திரங்கள், பங்குகள், அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், வங்கி முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. இந்தக் கடன்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களைக் காட்டிலும் மேலானவை.
இன்று பெரும்பாலும் கடன் நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பதால், முதலீட்டுத் திட்டங்களின் மீது கடன் பெறுவதும் மிக எளிதாகி விட்டது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், கடன் வாங்கிய பிறகும் முதலீட்டை விலக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். இருப்பினும் கடன் மற்றும் வட்டித் தொகையை சரியாக செலுத்தி விட வேண்டும். இல்லையெனில் அது உங்கள் முதலீட்டை பாதிக்கும்.
ஒருவேளை முதலீட்டை பாதியில் விலக்கிக் கொண்டால், ஆதாய வரியின் தாக்கம் இருக்கும். தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கடன் வாங்கும் போது ஆதாய வரியின் தாக்கம் இருக்காது. இருப்பினும் முதலீடுகளில் மீது நாம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்திலும் கடன் பெற சில தகுதிகள் இருக்கும். இந்தத் தகுதிகள் பூர்த்தியாகும் பட்சத்தில் விரைவான அணுகலில் கடனைப் பெற விண்ணப்பிக்கலாம். கடன் தொகை குறைவாக இருந்தாலும், ஆபத்தில்லாத பாதுகாப்பான கடனாக இவை இருக்கும்.
ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட, முதலீட்டுத் தொகையில் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இதனால் தேவையற்ற மன அழுத்தத்தை நீங்கள் தவிர்த்து விடலாம். உரிய நேரத்தில் முதலீடு செய்வது வருங்காலத் தேவைக்கு மட்டுமல்ல, அவசரத் தேவைக்கும் உதவுகிறது.