கூகுள் பே செயலி வாயிலாக கடன் வாங்கலாமா?

கூகுள் பே செயலி வாயிலாக கடன் வாங்கலாமா?

கூகுள் பே செயலி நேரடியாக கடன் வழங்குவதில்லை. அது சில நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் கைக்கோர்த்து, கூகுள் பே வாடிக்கையாளரை, நிதி நிறுவனத்துடன் இணைத்துவிடுகிறது.

இங்கு கூகுள் பே, நடுவில் உள்ள ஆசாமி மட்டுமே. கடன் வழங்குவதென்பது, நிதி நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது.

கூகுள் பே செயலியில், கடன் என்ற பக்கத்திற்கு சென்றால், நமது தகவல்களை நிரப்ப வேண்டும். நமது பான் கணக்கு எண், விலாசம், பிறந்த தேதி போன்றவற்றை நிரப்ப வேண்டும். நாம் சம்பள வேலையா, சுயதொழிலா, கடன் தொகை எவ்வளவு போன்றவற்றை நிரப்ப வேண்டும். ரூபாய். 10 ஆயிரம் முதல் 8 லட்சம் வரை கடன் விண்ணப்பிக்கலாம். ஆறு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை கடந்து திருப்பி செலுத்த கடன் காலவரையறை உள்ளது. மாதாந்திர தவணை தொகை ரூபாய் ஐந்நூறு முதல் உள்ளது.

விண்ணப்பத்தை நிரப்பிய பின்பு, நமது விண்ணப்பம், குறிப்பிட்ட நிதி நிறுவனத்திற்கு அனுப்பப்படும். நமது தகுதிக்கு ஏற்ப விண்ணப்பம் ஏற்கப்படலாம். நிராகரிக்கப்படலாம். அல்லது குறைவான கடன் கொடுக்கப்படலாம்.

கடன் தொகையானது நமது வங்கி கணக்கிற்கு, இதர செலவுகளை கழித்து ( கடன் பரிசீலனைத் தொகை போன்றவை) பைசல் செய்யப்படும்.இதற்கு வட்டி விகிதமானது 15% முதல் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

இப்போது கூகுள் பே‌ செயலியில் கடன் வாங்கலாமா வேண்டாமா எனப் பார்ப்போம்...

முதலில் கடன்களைத் தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்கவேண்டுமென்றால், முதலில் வீட்டிலுள்ள தேவையற்றப் பொருட்களை விற்றாவது கடனைத் தவிர்க்க வேண்டும்.

அது முடியாதென்றால், தங்கக் கடன் போன்ற அடமானம் சார்ந்த கடன்களை வாங்க வேண்டும். அவற்றில் வட்டி விகிதம் குறைவு.

அதுவும் முடியாதென்றால், அடமானம் இல்லாத தனிநபர் கடன் போன்ற கடன்களில் கடன் வாங்கலாம். அவற்றில் வட்டி விகிதம் அதிகம்.

தனிநபர் கடன் வாங்கியே தீர வேண்டுமெனில், இத்தகைய இரண்டு தளங்களை உடைய கடன்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் கடன் வாங்கும் போது, இரண்டு தளங்களுக்கு (கூகுள் பே, நிதி நிறுவனம்) பணம் அனுப்புகிறீர்கள். மேலும், வட்டி விகிதம் (குறைந்தபட்சம் 15%) அதிகமாக உள்ளது.

எனவே, தனிநபர் கடன் வாங்கவேண்டுமெனில், அருகிலுள்ள அரசாங்கம் சார்ந்த வங்கிகள், பெரிய தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்ற வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்குதல் நலம். இல்லையென்றால் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் கடன் முயற்சிக்கலாம்.

அவற்றில் எதில் முன்கூட்டிய கடன் அடைக்க அபராதம் குறைவு, கடன் பரிசீலனை கட்டணங்கள் குறைவு என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தக் கடன்களைக் கூட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அடைக்கப் பாருங்கள். உங்களுக்கு வேறு எங்குமே கடன் கிடைக்காத பட்சத்தில் கூகுள் பே வழியாக கடன் வாங்கிக் கொள்ளலாம். இதை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com