பணத்தைச் சேமிப்பது முக்கியமா? அதிகமாக சம்பாதிப்பது முக்கியமா?

Money Savings
Money Savings

இன்றைய உலகை பணம் தான் ஆள்கிறது. பணத்தை சேமிக்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், சேமிப்பு முக்கியமா அல்லது அதிகமாக சம்பாதிப்பது முக்கியமா என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

வருமானம் ஈட்டுபவர்கள் பலரும் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் சேமிக்கும் பணத்தின் அளவானது மாறப்போவதில்லை. ஆனால், வருமானத்தை உயர்த்த முயற்சி செய்யலாம். வேலைக்குச் செல்லும் சிலர், இதை விட மற்றொரு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்தால் போதும் என நினைப்பார்கள். வேலை மாறினால் சம்பளத்தில் அதிகபட்சம் 30% ஊதிய உயர்வு தான் இருக்கும். ஆனால், இவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தால் மட்டுமே இருமடங்கு வருமானத்தை ஈட்ட முடியும். சேமிப்பில் கவனம் செலுத்தும் நபர்கள், அதிகமாக சம்பாதிக்கவும் நினைப்பதுண்டு. ஆனால், அதற்கான முயற்சிகள் என்பது குறைவாகத் தான் இருக்கிறது.

மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமிப்பது முக்கியம் தான். இந்தத் தொகை வருங்காலத் தேவைக்கு உதவியாக இருக்கும். சேமிப்பிற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கைக்கும் கொடுக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் மாதச் சம்பளக்காரர்களின் சராசரி சம்பளம் ரூ.20,000 தான். இந்நிலையில், அனைவரும் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டியது சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். வேலைக்குச் செல்லும் நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் நீடிப்பது தவறல்ல. ஆனால், அதில் உங்களுக்கும் பலன்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் மற்றொரு நிறுவனத்தில் வேலையைப் பெற முயற்சிக்க வேண்டும்.

ஒருவரது சம்பளம் என்பது அவர் மாதந்தோறும் நிறுவனத்திடம் வாங்கும் தொகையைப் பொறுத்து நிர்ணயிக்கக் கூடாது. அதில் அத்தியாவசியத் தேவைகள் போக மீதம் சேமிக்கும் தொகையை வைத்துத் தான் நிர்ணயிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் இருவருக்கு சம்பளம் வேறு வேறாக இருக்கும். இதில் குறைவாக சம்பளம் வாங்கும் ஒருவர் சிக்கனமாக செலவு செய்து ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமிப்பார். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் மற்றொருவர், ஆடம்பரமாக செலவு செய்து அவரை விட குறைவாக சேமித்தால், இரண்டு பேரில் யார் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் மற்றும் யார் சம்பளத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது புரியும்.

அதிக சம்பளம் வாங்குவது அவசியமான ஒன்று தான். ஆனால், சம்பளம் குறைவோ அதிகமோ; எவ்வளவாக இருந்தாலும் சேமிப்பு அவசியம்.

இதையும் படியுங்கள்:
மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு: பணத்தை சேமிக்கும் 10 வழிகள் இதோ!
Money Savings

அதிகமாக வருமானம் ஈட்ட வேண்டுமெனில் சாதாரண பணியாளராக இருப்பதை விடவும், அந்நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும். இல்லையெனில் தனக்கென ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளாத வரையில், அதிக சம்பளமும் தொழில் வாய்ப்பும் குறைவு தான். நிறுவனத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்ப உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் வேலையை விட்டுச் செல்ல நினைத்தாலும், நிறுவனம் உங்களை விட்டு விடாமல் தக்கவைக்க நினைப்பார்கள். உங்கள் சம்பளத்தை உயர்த்தவும் முனைவார்கள்.

சேமிப்பில் நீங்கள் செலுத்தும் கவனத்தை விட ஒரு படி அதிக கவனத்தை அதிக வருமானம் பெற நீங்கள் செலவிட்டாலும் கூட, வருங்காலத்தில் உங்களுக்கு உதவக் காத்திருப்பது சேமிப்பு பணம் தான். ஆகையால் அதிக சம்பளம் வாங்க நீங்கள் முயற்சிப்பதில் தவறில்லை. தாராளமாக முயற்சி செய்யுங்கள். அதேநேரம் சேமிப்பையும் விட்டுவிடாதீர்கள் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com