லேசா...  லேசா...  'பரஸ்பர நிதி லேசா லேசா' (Mutual Fund lite) வரவுள்ளது!

லேசா... லேசா... 'பரஸ்பர நிதி லேசா லேசா' (Mutual Fund lite) வரவுள்ளது!

நாட்டின் முதலீட்டுச் சந்தையை கண்காணிக்கும் செபி, பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு ஏதுவாக, 'பரஸ்பர நிதி லேசா' (Mutual Fund lite) என்ற திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. இது இன்று வெளியான (7.8.2023) செபியின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதிகள் என்பவை ஊர் கூடி தேரிழுப்பதைப் போன்றவை. இங்கு பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தினைக் குறிப்பிட்ட பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.

பொதுவாக, பரஸ்பர நிதிகளில் இரண்டுவகைகள் உண்டு.

1. ஈடுபாடு சார்ந்தது (active mutual funds)

2. ஈடுபாடு அற்றது (passive mutual funds)

ஈடுபாடு சார்ந்த பரஸ்பர நிதிகளில், பரஸ்பர நிதி மேலாளர் தன்னுடைய விருப்பத்தின் படி, பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்கிறார்.

ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதிகளில், பரஸ்பர நிதி மேலாளர் தன்னுடைய விருப்பத்தின் படி, முதலீடு செய்வதில்லை. ஏற்கனவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பங்குச்சந்தை குறியீட்டினை ஒட்டி முதலீடு செய்கிறார்.

பரஸ்பர நிதி மேலாளர் தன்னிச்சையாக செயல்படுவதால், ஈடுபாடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை செபி வகுத்துள்ளது. உதாரணமாக, இவ்வளவு சொத்து மதிப்பு குறைந்தபட்சம் இருக்க வேண்டும். குழுவில் வேலைபார்ப்பவர்கள் இவ்வளவு அனுபவம் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம், பரஸ்பர நிதி மேலாளர் தன்னிச்சையாக செயல்படாமல், சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு காக்கப்படுகிறது.

இதுவரை, இத்தகைய கட்டுப்பாடுகள், ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதிகளுக்கும் பொருத்தப்பட்டது. ஆனால், ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதிகளில் , பங்குச்சந்தைக் குறியீடு சார்ந்து இயங்குவதால், அவற்றில் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் அவற்றில் தன்னிச்சையான செயல்பாடுகள் இல்லை. என்றும், அதனால், அவற்றிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாகவும், செபி தெரிவித்துள்ளது. இதனை 'பரஸ்பர நிதி லேசா' என்று அறிவித்துள்ளது.

இரண்டு வேறுபட்ட திட்டங்களுக்கு ஒரே கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. இதன் மூலம், பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் இன்னும் பல நிறுவனங்கள் உள்நுழைய முடியும். மேலும், இதில் அறிவார்ந்த பல முயற்சிகள் நடைபெறுவது எளிதாகும். அமெரிக்காவில், இத்தகைய பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் பிரபலம். இந்தியாவிலும், இவை பிரபலமடைந்து வருகின்றன.

மேலும், உலகத்திலேயே முதல் முறையாக, முதலீட்டாளர்களின் பணிஇழப்பை குறைக்கும் அணுகு தளம் (Investor risk reduction access platform) என்ற ஒன்றை உருவாக்கவுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம், ஒரு பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் இயங்கு தளம் முடங்கினாலும், பங்குகளை அணுக முடியும். பங்குசந்தையில் எல்லா மக்களும் பயன்படும் வகையில் எளிமையாக்க போவதாகவும் கூறியுள்ளது.

இனிவரும் காலங்களில், மக்கள் அதிகமாக பங்குச் சந்தையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்பலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com