
மஹிந்திரா நிறுவனம் அதிகம் விற்பனையாகும் கார்களின் விலைகளை திடீரென்று பெருமளவில் உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் மஹிந்திரா நிறுவனத்தினுடைய கார் மாடல்களின் கம்பீரமான தோற்றமே ஆகும். குறிப்பாக சொல்லப்போனால் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ மற்றும் தார் மாடல்கள் நீண்ட ஆண்டு காலமாக குறையாத மார்க்கெட் கொண்டுள்ளன.
இந்த வகை மாடல் கார்களின் விற்பனை மூலமே மஹிந்திரா நிறுவனம் பயணியர் காரில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. அதேநேரம் கனரக வாகன உற்பத்தியிலும் மஹிந்திரா நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்களில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஸ்கார்பியோ மாடல்களின் விலையையும், தார் எஸ்யூவி மாடல்களின் விலையையும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பெருமளவில் உயர்த்தி இருக்கிறது.
இவ்வாறு ஸ்கார்பியோ மாடல் ஏற்கனவே இருந்த விலையில் இருந்து 81,000 ரூபாயும், ஸ்கார்பியோ இஸட் 2 - 52,199 ரூபாயும், ஸ்கார்பியோ இஸட் 8 - 11,995 ரூபாயும், ஸ்கார்பியோ கிளாசிக்கின் எஸ் 11 - 24,000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தார் எஸ்யூவி மாடல் ஏற்கனவே இருந்த விலையில் இருந்து ஏ எக்ஸ் டூ வில் டிரைவ் வேரியன்ட் 44,000 ரூபாயும், ஏ எக்ஸ் டூ வில் டிரைவ் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 28, 000 ரூபாயும் மற்ற அனைத்து வகை வேரியன்ட் கார்களும் 16,000 விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகிய காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவன வட்டாரங்களில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.