இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மாருதி சுசுகி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் பிரபல கார் கம்பெனி நிறுவனமாக விளங்கி வரும் மாருதி சுசுகி நிறுவனம் பல்வேறு வகையான மாடல்களில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனத்தினுடைய நடப்பு நிதியாண்டின் அரையாண்டு பகுதி வரை மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 81 ஆயிரத்து 334 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் அதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரத்து 306 கார்களை விட 3 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கார்களின் எண்ணிக்கை நிறுவனத்தினுடைய வர்த்தக நடவடிக்கையை மேலும் விரிவு படுத்துவதாக அமைந்துள்ளது.
அதே சமயம் மாருதி சுசுகி நிறுவனத்தினுடைய 2022 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு விற்பனை செப்டம்பர் மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 380 ஆக இருந்தது. நடப்பு ஆண்டின் அதே மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுசுகி நிறுவனத்தினுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக உள்நாட்டு விற்பனை மற்றும் மொத்த விற்பனை தற்போதைய பண்டிகை காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.