ஒரு நாட்டின் பொருளாதாரமே அந்நாட்டிற்கு ஆணிவேராக இருக்கும் நிலையில், கரன்சியே இல்லாத நாடு உலகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! இருக்கிறது. அந்த நாடு குறித்து இப்பதிவில் காண்போம்.
தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடான 6.17 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாண்டெனேக்ரோ நாட்டில் பல காலமாகவே சொந்தமாக கரன்சி இல்லை. கரன்சி இல்லை என்றால் பொருட்கள் வாங்க மக்கள் என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் வரலாம். 2002 ஆம் ஆண்டு முதல் இந்த குட்டி நாடு ஐரோப்பிய யூனியனின் கரன்சியான யூரோவை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம் சொந்த நாணயம் இல்லாத நாடு என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு யுகோஸ்லோவியா சோஷலிச கூட்டாட்சியின் ஒரு பகுதியாக மாண்டினீக்ரோ 1999 வரை யுகோஸ்லோவியாவின் 'தினார்' அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தது.1990களில் ஏகப்பட்ட நிதி முறைகேடுகள் நடந்த நிலையில் 1990களில் மாதாந்திர பண வீக்கம் 50 % இருந்தது. அதே ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் அதிகரித்து 100% எட்டி பொருளாதாரம் படும் பாதாளத்திற்கு சென்றது.
இதை அடுத்து வேறு வழியில்லாமல் 1990ம் ஆண்டு முதல் ஜெர்மனியின் டாய்ச்ச மார்க் நாணயத்தை பயன்படுத்த தொடங்கியது. ஆனால் ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஆரம்பித்ததால் முறையான ஒப்புதல் இல்லாமல் மாண்டினீக்ரோவும் வேறு வழி இல்லாமல் யூரோவை தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. இது இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவியது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரும் இல்லாமல் ஒப்பந்தமும் இல்லாமல் இருப்பதால் பணவியல் கொள்கையில் முடிவெடுக்க இவர்களால் முடியாது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தவோ சுயமாக நாணயம் அடிக்கவோ முடியாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை மட்டும் நம்பியே இருக்க வேண்டும்.
பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டு நமது ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கவும் ஏற்றவும் செய்யும். ஆனால் சொந்த நாணயம் இல்லாத மாண்டினீக்ரோவால் இதுபோல செய்ய முடியாமல் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கிறது.
சொந்தமாக கரன்சி இல்லாத நாடாக இருந்தால் அடுத்தவர்களை எதிர்பார்த்து இருப்பதற்கு மாண்டினீக்ரோ நாடு ஒரு உதாரணமாக உள்ளது.