
ஐரோப்பிய யூனியலில் செயல்பட்டு வரும் சர்வதேச மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டில் இருக்கக்கூடிய சிறிய மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதை மீறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகில் மென்பொருள்கள் பயன்பாடு இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மென்பொருள்களினுடைய பயன்பாடு உலகம் முழுவதும் பறந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் மென்பொருள் நிறுவனங்களினுடைய வர்த்தகமும் பல்லாயிரம் கோடி ரூபாயை கடந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மிகப்பெரிய வர்த்தக சந்தையாக மாறி இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனங்கள் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வரி, வருவாயை அதிகரிக்கச் செய்யவும், அதே நேரம் உள்நாட்டில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒவ்வொரு நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. மென்பொருள் நிறுவனங்கள் விளம்பர வருவாய் மூலம் ஆண்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமாக ஈட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் செயல்பட்டு வரும் சர்வதேச மென்பொருள் நிறுவனங்களுக்கு கட்டுப்பட விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு மூலம் நான்கரை கோடி பயனாளர்களுக்கு மேல் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்நாட்டு சிறு மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு ஈட்டக்கூடிய வருவாயிலிருந்து 10 சதவீதம் அரசிற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களினுடைய பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்த புதிய சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றன.