கனவு இல்லமா? கைகூடும் முதலீடா? NRI-களுக்கான ஸ்மார்ட் முதலீட்டு டிப்ஸ்!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், எப்படி செய்வது என்பதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
NRI முதலீடு
NRI முதலீடுAI Image
Updated on

இந்தியாவில் முதலீடு செய்யும் முன்பு செய்ய வேண்டியது என்ன?

1. வெளிநாடு வாழ் வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்:

NRI வங்கி கணக்குகள்
NRI வங்கி கணக்குகள்AI Image

அதற்கு மூன்று விதமான கணக்குகள் உள்ளன.

என்ஆர்ஈ - NRE - Non residential external - வெளிநாடு வாழ் இந்தியரின் அயல் கணக்கு. இது வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிக்க உதவும்.

என்ஆர்ஓ - NRO - Non residential Ordinary - வெளிநாடு வாழ் இந்தியரின் சாதாரண கணக்கு. ஏற்கனவே, இந்தியாவில் வங்கி கணக்கு இருப்பின், அதனை வெளிநாடு வாழ் இந்தியரின் சாதாரண கணக்காக மாற்ற வேண்டும். இது இந்தியாவில் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிக்க உதவும்.

எஃப்சிஎன்ஆர் - FCNR - Foreign Currency Non Residential - வெளிநாடு வாழ் இந்தியரின் வெளிநாட்டுப் பணம். இது வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டுப் பணத்திலேயே சேமிக்க உதவும்.

2. கேஒய்ஸி பதிவு செய்ய வேண்டும்:

உங்களது வாடிக்கையாளரை அறிந்திருங்கள் (Know Your Customer-KYC) கேஒய்ஸி படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் கேஒய்ஸி பதிவு செய்திருந்தால் அதனை வெளிநாடு வாழ் இந்தியர் (Non Residential Indian-NRI) என மாற்ற வேண்டும். கேஒய்ஸி பதிவு செய்யாவிடில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அல்லது கேம்ஸ் (CAMS) போன்ற பதிவாளர் (Registrar) நிறுவனத்தில் கேஒய்ஸி பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் எங்கு முதலீடு செய்வது?

வைப்பு நிதிகள் - என்ஆர்ஓ வைப்பு நிதிகளில் 7 நாட்கள் முதல் பல வருடங்கள் வரை என வைப்பு நிதிகளை தொடங்கலாம். நீர்ப்புத்தன்மை அதிகம்.

என்ஆர்ஈ வைப்பு நிதிகள் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் என இருக்கும். ஒரு வருடத்திற்குள்ளாக மீட்சி (Redeem) செய்தால் வட்டி கிடைக்காது.

எஃப்சிஎன்ஆர் வைப்பு நிதிகள் இந்திய பணத்தில் இல்லாமல் வெளிநாட்டு பணத்திலேயே இருக்கும்.

என்ஆர்ஓ வைப்பு நிதிகளுக்கு வட்டிக்கு வரி உண்டு. என்ஆர்ஈ மற்றும் எஃப்சிஎன்ஆர் வைப்பு நிதிகளுக்கு வட்டிக்கு வரி கிடையாது. ஆனால், அவற்றில் வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.

பரஸ்பர நிதிகள்- பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் என்ஆர்ஓ மற்றும் என்ஆர்ஈ கணக்குகள் மூலம் முதலீடு செய்யலாம். அவற்றிற்கு இந்திய வருமான வரி விதிகளின்படி மீட்சி செய்யும்போது, முதலீட்டின் காலவரையறைக்கு ஏற்ப, குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short term capital gains tax), நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long term capital gains tax) கட்ட வேண்டும்.

என்ஆர்ஓ கணக்கு வழியாக தொடங்கப்படும் முதலீடுகளுக்கு மீட்சி செய்யும்போது, தோற்றுவாயிலேயே பிடிக்கப்படும் வரி (Tax Deducted At Source-TDS) கிடையாது. வருமான வரி தாக்கல் செய்யும்பொழுது வரி செலுத்த வேண்டும்.

என்ஆர்ஈ கணக்கு வழியாக தொடங்கப்படும் முதலீடுகளில் மீட்சி செய்யும்போது, தோற்றுவாயிலேயே மூலதன ஆதாய வரி பிடித்தம் செய்யப்படும்.

நிலம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) குடியிருப்பு சொத்துகள், வணிக சொத்துக்கள் வாங்க முடியும். ஆனால், விவசாய நிலம், தோட்டங்கள், பண்ணை வீடு போன்றவற்றை வாங்க முடியாது.‌ அவற்றை மீட்சி செய்யும் போது, காலவரையறைக்கு ஏற்ப நீண்டகால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரிகள் கணக்கிடப்படும். நீண்ட கால ஆதாய வரிகள் இந்திய வாழ் இந்தியர்களுக்கு சற்று குறைவு.

பங்குகள்- வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய பிஐஎஸ் (PIS-Portfolio Investment Scheme) டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். இத்தகைய டீமேட் கணக்குகளில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு நாளுக்கு உட்பட்ட வணிகம் (Intraday trading), எதிர்காலம் மற்றும் முன்னோக்கிய பேரங்கள் மற்றும் தேர்வுகள் சார்ந்த முதலீடுகள் (Futures and Options) போன்றவை அனுமதிக்கப்படாது.

பொது சேமநல நிதி (Public Provident Fund)- இந்திய வாழ் இந்தியர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். வெளிநாடு வாழ் இந்தியர் (NRI), ஏற்கனவே முதலீடு தொடங்கியிருந்தால், முதிர்வு காலத்தில் இதனை மறுபடி புதுப்பிக்க முடியாது. ஏற்கனவே உள்ள முதலீட்டை வைத்திருந்தால், அது வட்டி ஈட்டி கொண்டிருக்கும்.

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)- இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். என்ஆர்ஈ கணக்கு உள்ள வங்கியின் வாயிலாக தொடங்குவது எளிதாக இருக்கும்.‌

மீட்சி செய்யும் போது, கவனிக்க வேண்டியவை:

இந்திய முதலீடுகளை மீட்சி செய்யும்போது இரட்டை வரி விதிப்பை (Double Taxation) தடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, குறுகிய கால மூலதன ஆதாய வரிக்கு இந்தியாவிலேயே 15% வரி கட்டி விட்டால், வசிக்கும் நாட்டில் அதற்கு 25% வரி என்றால், வசிக்கும் நாட்டில் மீதமுள்ள 10% வரி கட்டினால் போதுமானது.‌

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), இந்தியாவிற்கு திரும்ப எண்ணி இந்தியாவில் முதலீடுகளைத் தொடர விரும்பினால், தங்களது கேஒய்ஸி ஐ இந்தியர் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது முதலீடுகளை மற்ற இந்தியர்களைப் போல தொடரலாம். இந்தியர்களைப் போல் மீட்சி காலத்தில் வரி செலுத்தலாம்.

இந்திய முதலீடுகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், மீட்சி செய்த பணத்தை என்ஆர்ஈ கணக்கிலிருந்து எளிதாக எந்த ஒரு வரம்புமின்றி வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும். என்ஆர்ஓ கணக்கு எனில், வருடத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை எடுத்துச் செல்ல முடியும். எஃப்சிஎன்ஆர் வைப்பு நிதிகளையும் எந்த ஒரு வரம்புமின்றி வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

முதலீட்டிற்கு சில உதவிக் குறிப்புகள்:

எதிர்காலத்தில், இந்திய முதலீட்டை மீட்சி செய்து, மறுபடி வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினால் என்ஆர்ஈ கணக்கு வழியாக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு கட்டுப்பாடுகள் கிடையாது. எதிர்காலத்தில், இந்திய முதலீட்டை மீட்சி செய்து இந்தியாவிலேயே வைத்திருக்க விரும்பினால், என்ஆர்ஓ கணக்கு வழியாக முதலீடு செய்ய வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்தியாவில் முதலீடு செய்யும் போது, ரூபாயின் ஏற்றத்தாழ்வின் காரணமாக முதலீட்டில் இலாபம் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதனையும் கணக்கில் கொண்டு இந்திய முதலீடுகளில் இறங்க வேண்டும்.‌ வெளிநாட்டில் பணத்தை எடுத்துச் செல்ல விரும்பினால், இந்தியாவின் வரி விதிப்பு, ரூபாயின் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு பின்னரும் இலாபம் இருக்குமா என்று கண்டு இந்திய முதலீடுகளில் இறங்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) தங்களது இந்தியா திரும்பும் எதிர்காலத் திட்டம் மற்றும் நிதிக் குறிக்கோள்களுக்கு தக்கபடி முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com