வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சலுகை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மகேந்திரா மற்றும் சுசுகி நிறுவனம்.
தமிழ்நாடு, ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கிறது மிக்ஜம் புயல். இப்புயலின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி வாழ் மக்களினுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி பெருமளவு பழுதடைந்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் சில இடங்களில் மழை நீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாருதி சுசுகி, மகேந்திரா வாகன உற்பத்தி நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களின் நிலையை உணர்ந்து மழையால் சேதம் அடைந்த வாகனங்களை பழுதுபார்க்க பல்வேறு சலுகைகளை அளித்துள்ளன. இதற்காக மாருதி சுசுகி நிறுவன வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்திருக்கும் பட்சத்தில் அவற்றை பழுதுபார்க்க டீலருடன் கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை பெற்றவுடனேயே குறுந்தகவல் வழியாக வாகனங்களை பாதுகாக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வாறு செய்வது என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வாகனங்களை பழுது பார்க்க 37 சாலை உதவி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவை வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் உடைய வாடிக்கையாளர்களின் நலன் கருதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு கட்டணம் இல்லாத பழுதை சரி செய்யும் சேவை அளித்து வருகிறோம். சாலையோர உதவி சேவை மையங்கள் மூலமாக மக்கள் இல்லம் தேடிச் சென்று வாகனங்கள் சரி செய்யப்படுகிறது. சேவை கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.