
இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக திகழ்வது ஃப்ளிப்கார்ட். இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூபாய் 4,890.6 கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியினால் மக்கள் பலரும் தங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்க விரும்புகின்றனர். இப்படி உணவு முதல் டிவி, கிரைண்டர் என்று அனைத்தையும் இருக்கும் இடத்திலிருந்து வாங்கி பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் கடந்த ஆண்டிற்கான தனது நிதி நிலையை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் தெரிவித்து இருப்பது ஃபிளிப்கார்ட் நிறுவனம் 2022-23ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக அளவிலான விற்பனையை மேற்கொண்டாலும், அவை நிறுவனத்திற்கு லாபத்தை பெற்று தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு நிறுவனத்தினுடைய கடந்த நிதியாண்டின் மொத்த விற்பனை 56,012.8 கோடியாகும். இது அதற்கு முந்தைய நிதியாண்டில் 51, 176 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த வருவாய் அதிகரித்து இருந்தாலும், நிறுவனத்தின் செலவு பன்மடங்கு கூடியிருக்கிறது.
தற்போது இந்தியாவில் வரி, போக்குவரத்து செலவு, வேலை ஆட்கள் செலவு மற்றும் பல்வேறு காரணங்களால் செலவு கூடி இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் கடந்த நிதியாண்டில் மொத்த செலவு 60,853 கோடியாக இருக்கிறது. இதனால் நிறுவனம் நிகர இழப்பை சந்தித்து இருக்கிறது. இவ்வாறு 4,890.6 கோடி ரூபாய் இழப்பை ஃபிளிப்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சந்தித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.