உங்களைச் சுற்றியிருக்கும் பகுதிநேர வேலைவாய்ப்புகள்!

Part Time Jobs
Part Time Jobs
Published on

வருமான ஆதரவைப் பெருக்க உங்களைச் சுற்றியிருக்கும் மற்றும் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியும் சில பகுதி நேர வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கை நிலை திண்டாட்டமாக இருக்கிறது. மாதாமாதம் செலவுகளும் கூடுவதால், முழுநேர வேலையைத் தவிர்த்து, மீதமிருக்கும் நேரங்களில் பகுதி நேரமாக வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு நேரமும், தொலைவும் இடையூறாக இருக்கிறது. நேரம் சரியாக அமைந்தால், அதிக தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும். சில சமயம் அருகிலேயே ஏதேனும் பகுதிநேர வேலைகள் கிடைத்தால், நேரம் நமக்கேற்றபடி அமையாது. ஆகையால், பலருக்கும் பகுதிநேர வேலைவாய்ப்பு என்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், உங்களுக்கு ஏற்ற சில பகுதிநேர வேலைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

டெலிவரி வேலை:

நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்தால், டெலிவரி வேலை உங்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலை வாய்ப்பாக இருக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரிபட்டு வருமோ அந்த நேரத்தில் இந்த வேலையைச் செய்ய முடியும். இந்த வேலைக்கு இருசக்கர வாகனம் மற்றும் லைசென்ஸ் இருந்தாலே போதும். இன்று ஆன்லைன் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஆர்டர் செய்வது பெருகி வருவதால், டெலிவரி பாய்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் டெலிவரி வேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

பேக்கரி:

இனிப்புகளை விற்கும் பேக்கரி கடைகளின் எண்ணிக்கை கிராமம் மற்றும் நகரங்களில் அதிகமாகவே உள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் பேக்கரிகளுக்குச் சென்று பகுதிநேர வேலையைக் கேட்டுப் பெறலாம். மேலும், இந்த வேலையை நன்றாகக் கற்றுக் கொண்டால், பின்னாளில் உங்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகவும் அமையும்.

உணவக வேலைகள்:

உணவகங்களில் எப்போதும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். எந்த வேலையும் கேவலம் இல்லை என்பதால், உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள உணவகங்களில் பகுதி நேரமாக வேலை செய்யலாம். இது உங்கள் வருமானத் தேவைக்கு உதவிகரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வேலை இழப்புக் காப்பீடு யாருக்கெல்லாம் பயன்படும்?
Part Time Jobs

ஃப்ரீலான்சர்:

உங்களுக்கு என்னத் திறமை இருக்கிறதோ அதற்கேற்ற நிறுவனங்களில் வீட்டில் இருந்தே புணிபுரியும் ஃப்ரீலான்சர் பணிகளை தேடிக் கொண்டால் மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு டிசைனிங் தெரியுமெனில், விளம்பர நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அவர்கள் வேண்டும் டிசைனில் விளம்பரங்களை வீட்டில் இருந்தே வடிவமைத்துக் கொடுக்கலாம். அதேபோல் மாத இதழ் மற்றும் வார இதழ் பத்திரிகைகளைக் கூட வடிவமைத்துக் கொடுக்கலாம்.

எழுத்தாளர்:

டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சி இன்று அபரிமிதமாக இருக்கிறது. அதற்கேற்ப பல ஆன்லைன் தளங்கள் செய்திகளை வழங்கி வருகிறது. நீங்கள் எழுத்துத் திறமை கொண்டவராக இருந்தால், இம்மாதிரியான ஆன்லைன் தளங்களைத் தொடர்பு கொண்டு பகுதி நேர எழுத்தாளராகவும் பணிபுரியலாம்.

விண்ணப்ப மையங்கள்:

கல்லூரி விண்ணப்பம் முதல் சாதிச் சான்றிதழ் வரை அனைத்துமே ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான அறிவு இருந்தாலே வெளியில் ஒரு விளம்பரப் பலகை வைத்துவிட்டு, கிடைக்கும் நேரங்களில் வீட்டில் இருந்தே ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தேவைப்படுவோருக்கு விண்ணப்பித்துக் கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com