காப்பீடு திட்டங்களால் சென்னை மக்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
காப்பீடு என்பது எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் பொருளாதார நடவடிக்கை ஆகும். பல்வேறு திட்டங்களின் கீழ் மற்றும் வகைகளில் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு ஆகியவை இந்தியாவில் அதிகம் தொடங்கப்படும் காப்பீட்டு திட்டங்கள் ஆகும். மேலும் வாகன காப்பீட்டை போக்குவரத்து சட்ட விதி கட்டாயப்படுத்தி இருக்கிறது. இப்படி அரசு சட்டமாக்கிய வாகன காப்பீடு பேரிடரால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் பொருளாதார இழப்பை சந்திக்காமல் பாதுகாத்து இருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை வெள்ளம் 5 நாட்களுக்கு மேலாக வடியாத நிலை காணப்பட்டது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்களினுடைய ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தன. வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள், வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விலை உயர்ந்த கார்களும் பெருமளவில் சேதம் அடைந்து இருப்பதால் அதை சரி செய்ய பெரிய அளவிலான தொகையை செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இக்கட்டான இச்சூழலை சமாளிக்க காப்பீடு திட்டங்களே மிகப்பெரிய அளவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு உதவிகரமாக அமைந்திருக்கிறது.
வாகன இன்சூரன்ஸ் பதிவு செய்த நபர்கள் அனைவரும் தற்போது பெரும்பான்மையானோர் கிளைம் செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதன் மூலம் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், விலை உயர்ந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பழுதை சரி செய்ய ஆகும் செலவுத் தொகையை காப்பீட்டின் மூலம் ஈடு செய்து உள்ளனர். மேலும் ஹோம் லோன் பதிவு செய்திருந்த நபர்களும் பெருமளவில் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர். ஹோம் லோன்கள் வீட்டின் சேதம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதால் ஹோம் லோன் பதிவு செய்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
அதேசமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில் காப்பீட்டு நிறுவனங்கள் ஆவணங்களை கேட்டு மக்களை அலைக்கழிக்காமல், காப்பீட்டுத் தொகையை விரைவாக விடுவித்தால் மக்கள் சிரமமின்றி பாதுகாக்கப்படுவார் என்பதும் பெரும்பான்மையான மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.