வீட்டுக் கடன் வாங்க திட்டமா? அப்போது 3/20/30/40 என்ற இந்த எண் முறையை பின்பற்றுங்கள்! 

வீட்டுக் கடன் வாங்க திட்டமா? அப்போது 3/20/30/40 என்ற இந்த எண் முறையை பின்பற்றுங்கள்! 

நைட் பிரான்க் இந்தியா(Knight Frank India), பிரபல நில ஆலோசக நிறுவனம் இந்தியாவின் வீடுகள் வாங்குவதற்கு கட்டுபிடியாகும் நகரங்களின்(affordable housing cities) பட்டியலை கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று, வெளியிட்டுள்ளது. இது வீட்டுக் கடனின் மாதாந்திர தவணைத் தொகைக்கும் (EMI), வருமானத்திற்கும் (income) இடையே உள்ள விகிதத்தின் படி, எந்தந்த நகரங்கள் வீடுகள் வாங்குவதற்கு எளிதானவை, எந்த நகரங்கள் வீடுகள் வாங்குவதற்கு கடினமானவை என்று தெரிவித்துள்ளது.

அதாவது, சராசரி வீட்டின் மாத வருமானத்தில், எவ்வளவு சதவிகிதம், வீட்டுக் கடனின் தவணைக்கு செல்கிறது என்பதை குறிப்பிடுகிறது. இந்தக் கணக்கீட்டில் 20 வருட வீட்டுக் கடன்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில், கடன் மற்றும் வீட்டின் மதிப்பிற்கான விகிதம் (loan to value ratio) 80% . அதாவது, வீட்டின் மதிப்பில் 80% வீட்டுக் கடனாக பெறப்பட்டுள்ளது. ஒரே வகையான வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.அந்தப் பட்டியலின் விபரங்கள் பின்வருமாறு.

அகமதாபாத் — 23% புனே — 26% கொல்கத்தா — 26% பெங்களூரு — 28% சென்னை — 28% தில்லி — 30% ஹைதராபாத் — 31% மும்பை— 55%இவற்றின் மூலம், மும்பையில் வீடு வாங்குபவர்களின் மாதாந்திர சம்பளத்தில் 55% வீட்டுக் கடனுக்கு மட்டுமே சென்று விடுகிறது. மீதமுள்ள 45% பணத்தில் அவர்கள் குடும்பத்தின் மற்ற செலவுகளான உணவு, உடை, போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவற்றை செய்ய வேண்டும். இது கடினமான விஷயமாகும்.

இதற்கு மாறாக, அகமதாபாத்தில், 23% மட்டுமே, வீட்டுக் கடனுக்கு செல்கிறது. அகமதாபாத்தில் வீடு வாங்குபவர்களுக்கு வாழ்க்கை நடத்துவது எளிதாக உள்ளது.மேலும், பாரத ரிஸர்வ் வங்கி எதிர்காலத்தில் தனது அடிப்படை வட்டி விகிதத்தினை அதிகரித்தால், கடன் தவணை கூடும் போது, இந்த விகிதங்கள் இன்னும் கூடும். எனவே, வீட்டுக் கடன் உள்ளவர்கள் வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்க முயல வேண்டும்.

பொதுவாக, வீட்டின் கடன் தவணை, சம்பளத்தில் அதிகபட்சம் 25 - 35% இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், வீட்டினை நடத்துவதற்கு உணவு, உடை, மின்சாரம், இணையம் போன்ற பயன்பாடுகள், வாகனம் போன்ற போக்குவரத்துகள் போன்றவை இன்று அத்தியாவசியமான செலவுகளாக மாறி விட்டன. எனவே, அதிக கடன் சுமையில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

வீடு வாங்குவதற்கு 3/20/30/40 சாம்யம்

பிரபல நிதி ஆலோசகர் பி. வி. சுப்ரமணியம் வீடு வாங்குவதற்கு 3/20/30/40 சாம்யத்தைக் கூறுகிறார். இதன் மூலம், நாம் பெரும் வீட்டுக் கடன் சுமையில் மாட்டிக் கொள்ள மாட்டோம்.

  • 3 மடங்கு - வருடாந்திர வருமானத்தைப் போல, 3 மடங்கு வீட்டின் விலை.

  • 20 வருடங்கள் - 20 வருட வீட்டுக் கடன்

  • 30% - மாதாந்திர சம்பளத்தில் 30% வீட்டுக் கடன் தவணை

  • 40% - வீட்டை வாங்குவதற்கான முன்பணம்

எனவே, நாம் மேலே கண்ட சாம்யத்தினைப் பின்பற்றி, பெரிய கடனில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். நமது வருமானத்திற்கு ஏற்ற வீட்டினைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  • எந்த ஊரில் வசித்தாலும், நமது சம்பளத்தினை சேமித்து, வீட்டின் மதிப்பில் 40% முன்பணத்தை தயார் செய்ய வேண்டும்.

  • நமது வருடாந்திர சம்பளத்தினைப் போன்ற 3 மடங்கு விலையுள்ள வீட்டினை வாங்க வேண்டும்.

  • 20 வருட காலவரையுள்ள வீட்டுக் கடன் வாங்க வேண்டும்.

  • வீட்டுக் கடனின் மாதாந்திர கடன் தவணை, நமது மாதாந்திர சம்பளத்தில் 30% க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டுக் கடனை எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ, அடைக்கப் பார்க்க வேண்டும்.கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com