
பெருகி வரும் பொருளாதாரத் தேவைகள் ஒருபுறம் இருக்க, பலரும் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கவும் போராடி வருகிறார்கள். பெரும்பாலும் சொந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு இருக்கும். ஆனால் பிழைப்புக்காக நகரத்திற்கு வந்து, அங்கேயே குடும்பத்துடன் வசிப்பவர்கள் வாடகை வீட்டில் தான் இருப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய கனவே சொந்த வீடாகத் தான் இருக்கும். சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டவோ அல்லது வாங்கவோ, வங்கிக் கடன் தான் பேருதவியாக அமைகிறது. அவ்வகையில் உங்களுக்குத் தேவையான அளவு வீட்டுக் கடனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
சொந்தமாக வீடு வாங்குவதற்கு திட்டமிடும் போது, உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ற வீட்டைத் தேர்வு செய்வது அவசியம். அதோடு, வீட்டுக்கான மொத்தத் தொகையையும் வங்கிக் கடனிலேயே வாங்கி விடலாம் என நினைக்காமல், முன்பணத்திற்கான தொகையையாவது நீங்கள் சேமித்து வைத்திருக்க வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கச் சென்றாலே முதலில் அவர்கள் நம்முடைய சிபில் ஸ்கோரை தான் சரி பார்க்கின்றனர்.
வீட்டுக் கடனுக்கு பெரிய தொகை கடனாக கொடுக்கப்படும் போது, சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஆகையால் சிபில் ஸ்கோரை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். கடன் பெற செல்லும் முன், சிபில் ஸ்கோரை அறிந்து வைத்திருப்பது நல்லது. சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால், உங்களின் கடன் தகுதியும் அதிகரிக்கும். நீங்கள் கேட்கும் பணத்தை வங்கிகள் கொடுக்கத் தயங்காது.
பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் தொகையை விடவும் வங்கிகள் குறைவாகத் தான் கடன் கொடுக்கும். ஆனால், ஒருசில நிதி செயல்பாடுகளை சரியாகச் செய்து வந்தால், நீங்கள் கேட்கும் தொகையை வங்கிகள் நிச்சயமாக கடனாக கொடுக்கும். ஏற்கனவே ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அதனை முழுவதுமாக அடைத்து விட்டு, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிச் செய்வதால் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும்.
உங்களின் மாத வருமானத்திற்கும், கடன் தொகைக்கும் இடையே இருக்கும் விகிதம் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் நிதி சிக்கல்களில் இருந்து விடுபட முடியும்.
இன்று எண்ணற்ற வங்கிகள் கடன் தர காத்திருக்கின்றன. ஆகையால் ஒரே வங்கியை நாடாமல், பல வங்கிகளின் கடன் அளவை ஒப்பிட வேண்டும். குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி, மாதத் தவணை, செயல்முறை கட்டணம், நிபந்தனைகள் மற்றும் இதர சலுகைகளை ஆராயுங்கள். இதில் எது உங்களுக்கு சிறந்ததாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
வீட்டுக் கடன் அளவைப் பொருத்தமட்டில், விருப்பம் மட்டுமின்றி நிதி நிலைமையையும் அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்.
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் வருமான வரி சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருங்கள். இதன்மூலம் கடன் செயல்முறையை விரைவுபடுத்தலாம். அதோடு வங்கிகளுக்கு உங்கள் மீது ஒரு நம்பகத்தன்மை உருவாகும். இதனால் நீங்கள் எதிர்பார்த்த தொகை கடனாக கிடைக்கும்.
இதற்கான வட்டி முக்கிய அம்சமாக பார்க்கப்படும் நிலையில், குறைந்த வட்டி விகதத்தில் கடன் பெற உங்கள் நிதி செயல்பாடுகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.