எளிய மக்கள் அஞ்சலக கூட்டு வட்டித் திட்டங்களைப் பயன்படுத்தி பணத்தைப் பெருக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.எந்த ஒரு கூட்டு வட்டித் திட்டத்திலும் பணத்தினைப் பெருக்கமூன்று விஷயங்கள் முக்கியம்.
முதலீட்டினை வளர விடும் காலம் (Tenure)
முதலீட்டின் வட்டி விகிதம் (Rate of Interest)
கூட்டு வட்டி கணக்கிடப்படும் காலவரையறை(Compounding Frequency)
இவை மூன்றையும் நமக்கு சாதகமாக பயன்படுத்த, நம்மால் பணத்தை நன்கு பெருக்க முடியும்.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் அருமை:
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் குறுகிய, நடுத்தர, நீண்ட கால குறிக்கோள்களுக்கான பல திட்டங்கள் உள்ளன.
பணத்தின் பாதுகாப்பு, ஏனென்றால் இவற்றுக்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறது.
நல்லதொரு வட்டி விகிதம்.
அரசின் வரி விலக்கு பல திட்டங்களில் உள்ளன குறிக்கோள்களுக்கு ஏற்ற பல திட்டங்கள்.
குறைந்த பணத்தினையும் கூட முதலீடு செய்ய அனுமதிக்கும், எளியோருக்கான ஏற்றத் திட்டங்கள். (உதாரணமாக, அஞ்சலக தொடர் வைப்பு நிதியில் 100 ரூபாய்கள் கூட முதலீடு செய்யலாம்)
மிக குறைந்த கட்டணங்கள்.
முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக, கடன் பெறும் வசதி. (உதாரணமாக, தேசிய சேமிப்புப் பத்திரத்தினைக் கொண்டு , கடன் பெறலாம்.)
இந்தியா முழுவதுமுள்ள 1.5 லட்சத்திற்கும் மேலாக உள்ள அஞ்சலக கிளைகள் மூலமாக, பண பரிவர்த்தனை
அதிகபட்ச முதலீட்டு வரைமுறை இல்லாத திட்டங்களில், அதிக பணத்தினை முதலீடு செய்யமுடியும்
குறிக்கோளுக்கு ஏற்ற பல்வேறு அஞ்சலக திட்டங்கள்-
சேமிப்பிற்கு
சேமிப்பு கணக்கு 4%
குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு
1/3/5 வருட வைப்பு நிதிகள்-அதிகபட்சமாக 7.5%
5 வருட தொடர் வைப்பு நிதி-6.7%
நடுத்தர காலக் குறிக்கோள்கள்
தேசிய சேமிப்புப் பத்திரம் - 7.7%
கிசான் விகாஸ் பத்திரம்-7.5%
மாதாந்திர சேமிப்பு திட்டம் - 7.4%
நீண்ட காலக் குறிக்கோள்கள்
பொது சேம நல நிதி-7.1%
சுகன்யா சம்ரிதி திட்டம்-8%
மூத்தகுடி மக்கள் சேமிப்புத் திட்டம் -8.2%
எது நீண்ட காலத்திற்கு பணத்தினைப் பெருக்க நல்லதொரு திட்டம்?
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில், கூட்டு வட்டி மூலம் பணத்தினைப் பெருக்க மிகவும் சிறந்த திட்டம், பொது சேமநல நிதி (Public Provident Fund). இது (வரி விலக்கு - வரி விலக்கு - வரி விலக்கு) என்ற அம்சத்தில் அமைந்துள்ளது. Exempt- Exempt - Exempt என்ற படி அமைந்துள்ளது. அதாவது,
முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு
வட்டிக்கு வரி விலக்கு
முதலீட்டினை திரும்பப் பெறும் போது வரி விலக்கு
என அருமையாக அமைந்துள்ளது. மேலும், நல்லதொரு வட்டி விகித்தினைக் கொண்டுள்ளது. தற்போது, 7.1% உள்ளது. இதனை சராசரியாக 8% என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, 20வது வயதில் வருடம் 1.5 லட்சம் முதலீடு செய்தால், 60 வது வயதில் எவ்வளவு பணம் வருமெனப் பார்ப்போம்.
8% வருடா வருடம் வட்டியெனக் கொள்வோம். இதில் கூட்டு வட்டியானது வருடா வருடம் கணக்கிடப் படுகிறது.மொத்தமாக பெருகிய பணம்; ரூபாய் 4,37,81,226.56 (4 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரத்து 226 ரூபாய்). இதில் கூட்டு வட்டியின் மூலம் வளர்ந்த பணம் மட்டும்; ரூபாய் 3,76,31,226.56 (3 கோடியே 76 லட்சத்து 31 ஆயிரத்து 226 ரூபாய்) இதில், அருமையான அம்சம் இந்த மொத்த தொகையும் எந்த ஒரு வரியுமின்றி சுளையாக கையில் கிடைக்கும்.
கூட்டு வட்டித் திட்டங்களில் பணத்தினை வளர விட வேண்டும். நடுவில் எடுத்தால், அது பொன் முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமானம்.அஞ்சலக கூட்டு வட்டித் திட்டங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, பணத்தினைப் பெருக்குவோம்.