
நம்மில் பலரும் கடன் வாங்க வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களைத் தான் அதிகளவில் நாடுவோம். இங்கு எவ்வகையான கடன் மற்றும் சிபில் ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதத்தில் வேறுபாடு இருக்கும். மற்ற கடன்களுடன் ஒப்பிட்டால், தனிநபர் கடன்களுக்கு எப்போதுமே வட்டி அதிகம் தான். ஆனால் நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்து வந்தால், வங்கியில் வழங்கும் தனிநபர் கடனை விடவும் குறைந்த வட்டியில் கடனைப் பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் கடன் வாங்குவது குறித்த தகவல்களை இப்போது காண்போம்.
அஞ்சல் அலுவலகத்தில் பலவகையான முதலீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதோடு பாதுகாப்பான முதலீடு என்ற நற்பெயரும் இதற்கு உண்டு. அவ்வகையில் அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்து வரும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் கடன் பெறும் தகுதியையும் அடைவார். இதனைப் பயன்படுத்திக் கொண்டால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் தெரியாமல் இருப்பதால் தான், கடன் என்றவுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர்.
அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் தொகைத் திட்டத்தில் (Recurring Deposit), 5 ஆண்டுகள் வரை மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கலாம். முடிவில் நம் முதலீட்டை 6.7% வட்டியுடன் சேர்த்துப் பெறலாம். தொடர்ந்து ஒரு வருடத்திற்கு 12 தவணைகளை சரியாக செலுத்தி வரும் பட்சத்தில், நீங்கள் இத்திட்டத்தில் கடன் பெறும் தகுதியை எட்டலாம். அப்படி கடன் பெற விண்ணப்பித்தால் அதுவரை நீங்கள் செலுத்திய மொத்தத் தொகையில் இருந்து, 50% வரை கடன் பெற முடியும்.
இதற்கான வட்டியைப் பொறுத்தவரையில், தொடர் வைப்புத் தொகைத் திட்டத்திற்கான வட்டியுடன் 2% கூட்டி 8.7% ஆக வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற RD பாஸ்புக்குடன், விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும் வங்கிகளை விட அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கடன் தொகை உங்கள் முதலீட்டைப் பொறுத்தே இருக்கும். அதிகமான முதலீட்டுத் தொகை இருந்தால், கடன் தொகை அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாங்கிய கடன் தொகையை மொத்தமாகவும் செலுத்தலாம் அல்லது மாதாந்திர தவணை முறையிலும் செலுத்தலாம். ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை எனில், தொடர் வைப்புத் தொகைத் திட்டம் முதிர்ச்சி அடையும் போது, கடன் மற்றும் வட்டித் தொகை கழிக்கப்பட்டு மீதித் தொகை உங்களுக்கு வழங்கப்படும்.
இதுவே ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் தனிநபர் கடனைப் பெற்றால், அதற்கான வட்டி 10% முதல் 24% வரை இருக்கும். ஆனால் அஞ்சல் அலுவலகத்தில் வட்டி விகிதமானது இதனைக் காட்டிலும் குறைவு. ஆகையால் பாதுகாப்பான முதலீட்டுக்கு மட்டுமல்ல குறைந்த வட்டியில் கடன் பெறவும் அஞ்சல் அலுவலகங்கள் நமக்கு உதவுகின்றன. குறைந்த கடன் தொகை தேவைப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, அஞ்சல் அலுவலகத்தின் இந்த கடன் வசதி நிச்சயமாக உதவும்.