வரப்போகும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயருமா? குறையுமா?
பொதுவாக பெண்கள் மத்தியில் தங்கத்தின் மீதான மதிப்பு மிகவும் அதிகம். இருப்பினும் இதன் விலையேற்றம் அவர்களுக்கு அடிக்கடி கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், விலைவாசி உயர்வும் உச்சத்தை நோக்கிச் செல்கிறது. இதில் தினசரித் தேவைக்கு உதவும் தக்காளி விலை அதிகரித்தால் கூட, அதைப்பற்றி கவலை கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் இருந்தால் பலரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்திய மக்கள் பலரும் தங்கத்தை பிராதான அணிகலனாக பார்க்கின்றனர். சிலர் தங்கத்தை கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கின்றனர்.
தங்கமும் ஒரு மஞ்சள் நிற உலோகம் அவ்வளவு தான் என்று கடந்து சென்றால், இதன் விலை ஏறினாலும் குறைந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், நம்மை அலங்கரிக்கும் அற்புத அணிகலனாக தங்கத்தை நினைப்பதால் தான் இதன் விலையேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறோம். நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், என்றாவது ஒரு நாள் மட்டும் தான் குறைகிறது. விலை குறையும் போது பெருமூச்சு விடும் நாம் தான், விலையேற்றத்தின் போது அதிர்ச்சியும் அடைகிறோம்.
இனி வரப்போகும் ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். வட்டி விகிதக் குறைப்பு, புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கி கொள்முதல், அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் சீனாவின் தேவை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 3,000 டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 10 கிராம் தங்கம் ரூ.87,000-ஐ எட்டும். சமீபத்திய போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு போன்ற சில காரணங்களால் சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் வரலாற்றில் அதிகபட்சமாக 2,670 டாலர்களை எட்டியது.
மூன்றாம் உலக நாடுகள் மற்றும் பிரிக்ஸ் நாடுகள் டாலரை விட்டு விலகியது. மேலும், மத்திய வங்கிகள் தங்கத்தின் கையிருப்பை அதிகப்படுத்தின. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரும் என ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பிலிப் லீல் கேமேஜோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து $2,700, $2,800, $2,900 மற்றும் $3,000 டாலராக உயரும் என பிரபல பொருளாதார வல்லுநர் கமாஸ்ஸோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.