பிரபல கடன் வழங்கும் நிதி நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி 2.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவின் பிரபல வங்கி இல்லாத கடன் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது எல் அண்ட் டி நிறுவனம். இந்நிறுவனம் மும்பையில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் வீட்டுக் கடன், இருசக்கர வாகன கடன், பண்ணை கடன் ஆகியவற்றுக்கு இந்நிறுவனம் கடன் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எல் அண்ட் டி நிறுவனம் கடன் விதியை மீறி செயல்பட்டதற்காக ரிசர்வ் வங்கி இந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, எல் அண்ட் டி நிறுவனம் வங்கி இல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது நாடு முழுவதும் பல்வேறு கடன்களை வட்டிக்கு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் விண்ணப்ப படிவத்தில் சரியான விளக்கத்தை அளிக்க தவறி உள்ளது. அபாய வரம்புகளை குறிப்பிட தவறி இருக்கிறது. பல்வேறு வகையான வட்டி விதிப்பிற்கான காரணங்களை தெரிவிக்க மறுத்திருக்கிறது என்பது பல்வேறு கட்ட விசாரணையின் முடிவில் தெரிய வருகிறது.
வங்கி இல்லாத இந்த நிறுவனத்தினுடைய செயல்பாடு பொதுமக்களை பாதிப்பதாக இருக்கிறது. மேலும் சட்ட விதிமுறைகளுக்கும் புறம்பாகவும் இருக்கிறது. இதை அடுத்து ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 2.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட பிறகு தான் அபராதத் தொகை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.