வங்கி கடன் கிடைக்கவில்லையா? RBI பரிந்துரைத்த இந்த 15 நிறுவனங்களில் ட்ரைப் பண்ணுங்கள்!

வங்கி கடன் கிடைக்கவில்லையா? RBI பரிந்துரைத்த இந்த 15 நிறுவனங்களில் ட்ரைப் பண்ணுங்கள்!
Published on

2023-24ம் நிதி ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கி அதிக மதிப்பெண் வழங்கிய 15 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எவை தெரியுமா ?

அடிப்படையில் நிதி நிறுவனங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 

1. வங்கிகள் - Banks

2. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் - Non Banking Financial Companies

இவை இரண்டுமே மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின் படியே உரிமம் வழங்கப்படுகின்றன. ஆனால், இவற்றிற்கு கட்டுப்பாடுகள் மாறுபடும். உதாரணமாக, வங்கிகளில் மக்கள் சேமிப்புக் கணக்குத் தொடங்க முடியும். வங்கிசாரா நிதி நிறுவனங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்க முடியாது. ஆனால், இவை இரண்டுமே மக்களுக்கு கடன்கள் வழங்க முடியும். வங்கிகளில் கடன் கிடைக்காதவர்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களை கடனுக்கு அணுக முடியும். சில வங்கிசாரா நிதி நிறுவனங்களில் வைப்பு நிதிகள் முதலீடு செய்ய முடியும்.

இந்நிலையில் 14.9.2023 அன்று, மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NON BANKING FINANCE COMPANIES) மேலடுக்கு நிறுவனங்களின் (UPPER LAYER) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தரம், நிதியின் அளவு சார்ந்த அளவீடுகள் மற்றும் நிபுணர்களின் கண்காணிப்பின்படி தயாரிக்கப்பட்டது.

மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் படி, இத்தகைய வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்கேற்றவாறு அவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இவற்றை scale based regulations என்று அழைப்பர். இவ்வாறு வகைப்படுத்தலில் 4 அடுக்குகள் உள்ளன.
அடிப்படை அடுக்கு - NBFC BASE LAYER - சிறிய நிறுவனங்கள்
நடுத்தர அடுக்கு - NBFC MIDDLE LAYER - சற்று பெரிய நிறுவனங்கள்
மேலடுக்கு - NBFC UPPER LAYER - பெரிய நிறுவனங்கள்
உச்சகட்ட அடுக்கு - NBFC TOP LAYER - மிகப்பெரிய நிறுவனங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள மேலடுக்கு பட்டியலில் (UPPER LAYER) 15 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளன. 

  1. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

  2. பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

  3. ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம்

  4. டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்

  5. எல் & டி பைனான்ஸ் லிமிடெட்

  6. பிராமல் கேப்பிடல் & ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

  7. சோழமண்டலம் இன்வெஸ்மண்ட் & பைனான்ஸ் கம்பெனி

  8. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

  9. மஹிந்திரா & மஹிந்திரா பைனான்ஸியல் சர்வீஸஸ் லிமிடெட்

  10. டாடா கேப்பிடல் பைனான்சியல் சர்வீஸஸ் லிமிடெட்

  11. பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

  12. ஹெச்டிபி பைனான்சியல் சர்வீஸஸ் லிமிடெட்

  13. ஆதித்யா பிர்லா பைனான்ஸ் லிமிடெட்

  14. முத்தூட் பைனான்ஸ் லிமிடெட்

  15. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்


இவ்வாறு மேலடுக்கில் வகைப்படுத்தபடும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தோல்வியடைவதென்பது நாட்டின் நிதி நிலைமைக்கு ஆரோக்கியமான அம்சமல்ல. எனவே, அவற்றிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் பாரத ரிஸர்வ் வங்கியால் விதிக்கப்படும். அடுத்த ஆண்டில் இந்த நிறுவனங்கள் இத்தகைய மேலடுக்குப் பட்டியலில் வராவிட்டாலும் கூட, இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்.

இந்தப் பட்டியலில் இடம்பெறும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது. நாட்டின் வங்கி சாரா நிதிநிறுவனங்களில் ஓரளவிற்கு பாதுகாப்பான நிறுவனங்களைக் கண்டுக்கொள்ளலாம். அவற்றில் கடன் வாங்குவது, முதலீடு செய்வதென்பது மற்ற வங்கிசாரா நிதி நிறுவனங்களை விட பாதுகாப்பானது.  வருடா வருடம், தோல்வி அடையக் கூடாத வங்கிகளின் (SYSTEMIC IMPORTANT BANKS) பட்டியலையும் மத்திய ரிசர்வ் வங்கி கடந்த பல ஆண்டுகளாக வெளியிட்டுவருவதென்பது குறிப்பிடப் படவேண்டிய அம்சம். அதனைப் போன்றே வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வகைப்படுத்தலும் பாராட்டப் பட வேண்டிய அம்சம். இத்தகைய பட்டியல்கள் சாதாரண முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைகின்றன. அவர்கள் முதலீடு மற்றும் கடன் வாங்குவதற்கு வங்கிகளைத் தாண்டி, இந்தப் பட்டியல் நிறுவனங்களை அணுக முயலலாம். இவை வங்கிகளுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com