
பலர் எதிர்கால செலவுகளை கருத்தில் கொள்வதில்லை. பண வீக்கம் மற்றும் சுகாதார செலவுகளின் தாக்கத்தை புறக்கணிக்கின்றார்கள். இதனால் அவர்களின் ஓய்வூதிய ஆண்டுகளில் பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மன அழுத்தம் இல்லாத ஓய்வு நாளுக்காக சேமிக்க தொடங்குவது அவசியம். அவற்றில் தவிர்க்க வேண்டிய சில ஓய்வூதிய தவறுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1) சேமிப்பை தாமதிப்பது:
எவ்வளவு விரைவில் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு பணத்தை நீண்ட காலத்திற்கு வளர்க்க முடியும். எனவே சேமிப்பை தாமதிப்பது கூடாது. தாமதமாக தொடங்குவது கூட்டு திட்டத்தின் நன்மைகளை வெகுவாக குறைக்கிறது. எனவே சம்பாதிக்கத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நம் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும். இது நம் ஓய்வூதிய நிதி காலப்போக்கில் கணிசமாக வளர உதவும்.
2) முதலீடு செய்யாமல் இருப்பது:
வங்கி கணக்கில் பணத்தை சேமிப்பது மட்டுமே போதாது. நீண்ட காலத்திற்கு நம் பணத்தை வளர்க்கும் முதலீடுகளில் ஈடுபடுவதும் அவசியம்.
3) பண வீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் இருப்பது:
காலப்போக்கில் பணவீக்கம் நம் சேமிப்பின் மதிப்பை மாற்றும் என்பதால் நம் முதலீடுகளை சரிபார்த்து பணவீக்கத்தை முறியடிக்கும் வகையில் முதலீடுகளை செய்ய வேண்டியது அவசியம்.
4) சுகாதார செலவுகளைக் குறைத்து மதிப்பிடுவது:
வயதிற்கு ஏற்ப சுகாதார செலவுகள் அதிகரிக்கும். இவை நம் சேமிப்பை விரைவாக காலி பண்ணிவிடும். ஓய்வு காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளதால், போதுமான உடல்நல காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
5) முதலீடுகளைச் சமநிலைப்படுத்தாமல் இருப்பது:
நம் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை அடிக்கடி மதிப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப அவற்றை சமநிலைப்படுத்துவது முக்கியம். முதலீடுகளை வெவ்வேறு சொத்துகளில் பன்முகப்படுத்தி, பல வருமான வழிகளை உருவாக்க வேண்டும். வருடாந்திர திட்டங்கள், பரஸ்பர நிதிகள் அல்லது வாடகை வருமானம் போன்ற சிறந்த நிதி பாதுகாப்பைப் பெற வேண்டும்.
6) முதலீடுகளை முழுமையாகத் திரும்ப பெறுவது:
ஓய்வு காலத்தில் அனைத்து முதலீடுகளையும் ஒரே நேரத்தில் திரும்பப் பெறுவதற்கு பதிலாக, வருமானம் மற்றும் பணத் தேவைகளுக்கு ஏற்ப முதலீடுகளை நிர்வகிப்பது நல்லது.
7) நிதி இலக்குகள் இல்லாமல் இருப்பது:
சரியான திட்டமிடல் இன்றி, நிதி இலக்குகள் இல்லாமல் ஓய்வு காலத்தை எதிர்கொள்வது மிகப்பெரிய ஆபத்தாகும். ஏனெனில் இது நம் சேமிப்பு பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். எனவே நிதி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தெளிவான இலக்கை நிர்ணயிக்க, நம் ஆயுட்காலம், பணவீக்க விகிதம் மற்றும் எதிர்கால செலவுகளை கருத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
8) கடனை தீர்க்காமல் இருப்பது:
ஓய்வு பெறுவதற்கு முன் கடனை தீர்க்காமல் இருப்பது நம் நிதி பிரச்னைகளை அதிகரிக்கும். கடன் சுமையுடன் ஓய்வு பெறுவது சரியல்ல. எனவே ஓய்வு பெறுவதற்கு முன்பு கடன்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நிம்மதியான வாழ்வுக்கு வழி வகுக்கும். பாதுகாப்பான மற்றும் மன அழுத்தமில்லாத ஓய்வு வாழ்க்கையை அனுபவிப்பதற்கு கடன்களை முன்கூட்டியே அடைப்பது அவசியம்.
ஓய்வூதிய திட்டமிடல் தவறுகளை தவிர்ப்பது ஏன் அவசியம் தெரியுமா?
பிற்காலத்தில் நிதி பாதுகாப்பையும், மன அமைதியையும் உறுதி செய்ய ஓய்வூதிய திட்டமிடல் தவறுகளை தவிர்ப்பது அவசியம். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும், சுகாதார பராமரிப்புக்காக முன்கூட்டியே போதுமான நடவடிக்கைகளை எடுப்பதும், வாழ்க்கை முறையை சரியான முறையில் பராமரிக்கவும், அவசர நிலைகளை கையாளவும் இது அவசியம்.